tamilnadu

திருவாரூர் முக்கிய செய்திகள்

மீன் வளத்துறையில் காலிப் பணியிடம் 
திருவாரூர், செப்.28-தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் திருவாரூர் மாவட்டக் காவிரி டெல்டா உபநில கோட்டம் பகுதியில் நீர்வள நிலவளத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் மீன்வளத் திட்டங்களைச் செயல்படுத்த 1 களப்பணி மேற்பார்வையாளரை ரூ.20,000 மாதத் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 31.03.2020 வரை பணியமர்த்த நாகப்பட்டினம் மண்டலம் மீன்துறை இணை இயக்குநர் முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடத்தித் தற்காலிகமாக நியமனம் செய்திட அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.  திருவாரூர் மீன்வள உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் மீன்வளத் திட்டப் பணிகளைக் காவிரி டெல்டா உபவடிநிலப்பகுதிகளில் செயல்படுத்திடக் களபணி மேற்பார்வையாளர் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளார். எனவே, இளநிலை மீன்வளப்படிப்பு, முதுநிலை மீன்வளப்படிப்பு, முதுநிலை அறிவியல் (விலங்கியல் கடல் உயிரியல்) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதி பெற்றுள்ள நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். முற்றிலும், தற்காலிக அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் நியமனம் நடைபெறும். இப்பணிக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்க ப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்: 210, 2வது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகக் கட்டிடம், திருவாரூர் -610 004. தொலைப்பேசி எண்: 04366 224140 என்ற முகவரிக்குத் தங்கள் சுயவிவரம் மற்றும் சான்றிதழ் நகல்களைக் கொண்ட விண்ணப்பக் கடிதத்துடன் வரும் அக்டோபர் 3ம் தேதி காலை 11 மணிக்கு மேற்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இலவசத் திறன் வளர்ப்பு பயிற்சி 
திருவாரூர், செப்.28-படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்குத் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் மூலம் இலவசத் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் எம்பிராய்டரி பயிற்சிக்கு 50 பயனாளிக்கு 3 மாதம் நடத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தின்கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1000 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.  இதற்கான நேர்காணல், திருவள்ளூர் மாவட்டத்தில், எண்.1டி, முதல் குறுக்கு தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயா நகர், திருவள்ளூர் மாவட்டம்-602001 உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் அக்டோபர் 3 அன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது. மேற்படி திட்டத்தின்கீழ்ப் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி திட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், இதுதொடர்பான விவரங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர் அல்லது ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (எவரஸ்ட், உதவி மண்டல மேலாளர்- 9380513874) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், சென்னை (தொலைபேசி- 044- 28514846) ஆகியோர்களை அணுகலாம் எனத் திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.