tamilnadu

img

70 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் கருகும் அபாயம்.... உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்:
திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போதுமான தண்ணீர் இல்லாமல் குறுவை பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலங்களில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே போதுமான அளவிற்கு தண்ணீர் திறந்துவிட்டு நெற்பயிரை பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூன் 12 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் சாகுபடிக்காக தண்ணீர் திறந்திவிடப்பட்டது விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. குறுவை சாகுபடி பணிகளும் நடைபெற்றது. பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் சம்பா நாற்று விடுவதற்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். சிலர் நாற்று விட்டுள்ளனர். கடந்த 2 வாரமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து இன்றி பயிர்கள் காயத் தொடங்கியுள்ளன. மழை கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் போதுமான மழையும் பெய்யவில்லை. இந்த நேரத்தில் குறுவை பயிரை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

மேலும் சம்பா நாற்றாங்காலுக்கும் தண்ணீர் வேண்டும். ஆங்காங்கே வாய்க்காலில் உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து சிலர் இறைத்துவிட்டார்கள். தமிழக அரசு தற்போது திறந்துவிட்டுள்ள தண்ணீரும் போதுமானதல்ல. குறைந்த அளவு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால் கடைமடை பகுதிக்கு வர காலதாமதம் ஆகும். கல்லணையிலிருந்து வெண்ணாற்றிற்கும், காவிரிக்கும் வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறையாமல் வழங்க வேண்டும். வெண்ணாறு மற்றும் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் கிளை நதிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் குறுவை மற்றும் சம்பா சாகுபடி எதிர்பார்த்த பலனைத்தரும். எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுத்து கள ஆய்வு செய்து தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;