tamilnadu

img

மோடியும், அமித்ஷா-வும் ஹிட்லர், முசோலினிக்கு இணையானவர்கள்

திருவாரூர்:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ளார். மோடி மற்றும் அமித்ஷாவை மகாபாரத கதாபாத்திரங்களான கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார். இது மிகவும் சந்தர்ப்பவாத பேச்சு. மோடி மற்றும் அமித்ஷா ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் என ரஜினிகாந்த் விரைவில் புரிந்து கொள்வார் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.திங்கட்கிழமையன்று திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:நாடு முழுவதும் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மகசேசே விருது பெற்ற விரு தாளர்கள் போன்றோரை வீட்டுச் சிறையில் வைப்பதற்கான நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தகவல் வருகிறது. இந்த சர்வாதிகார சூழ்நிலையில் தான் ரஜினிகாந்த் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.  

மத்தியப் பல்கலை. மாணவர்களின் உரிமையை பறிப்பதா?
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 30 மாணவர்களுக்கு காஷ்மீர் விவகாரம் குறித்துகலந்துரையாடல் நடத்தியதற்காக நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் மூலமாகநடவடிக்கைக்கு முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. இது வன்மையான கண்டனத் திற்குரியது.மத்திய பல்கலைக்கழகத்தில் வாரம் ஒருமுறை புதன் கிழமைகளில் மாணவர்களி டையே பல்வேறு பிரச்சனைகள் குறித்து உரையாடல் நடைபெறும். இதில் பங்கேற்ற மாணவர்கள் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்களை முன்வைப்பார்கள். இதனை யொட்டி தான் மத்திய அரசால் காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் பிரிவு 370 மற்றும் 35 ஏ குறித்து விவாதம் நடத்தியுள்ளனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை அடிப்படையில் தான் இந்த விவாதம் நடந்துள்ளது. ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், நெறிப்படுத்தும் குழுத் தலைவர் ஆகியோர் மாணவர்கள் அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசியதாக கூறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.உடனடியாக இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிபந்தனை யற்ற முறையில் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மாவட்டத்திலுள்ள மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பினை ஒருங்கிணைத்து மாவட்டம் முழுவதும் பெரும் போராட்டங் களில் ஈடுபட நேரிடும்.

டெல்டா அவலம்
கடந்த 8 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லை. சம்பா சாகுபடியும் போதுமான அளவு நடைபெற வில்லை. முப்போக விளைச்சல் என்பது இல்லாமல் போய் விட்டது. விவசாயம் பொய்த்துப் போன நிலை உருவாகி விட்டது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. அரசு அறிவிப்பதற்கும், நடைபெற்று வரும் பணிகளுக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. புதிதாக எதுவும் நடைபெறவில்லை. பழைய பணியே நடைபெறுகிறது. புதிய பணி நடைபெறுவதாக மக்களை ஏமாற்றுகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் எளிதில் கிடைக்காததால் நுண்கடன் (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களை மக்கள் நாடிச் செல்கின்றனர். அவர்கள் கந்துவட்டிக்கு நிகராகவட்டி வசூல் செய்கின்றனர். இவர்களிடம் மக்கள் சிக்கி திணறுகின்றார்கள். இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாய பணி என்பது முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்து மாற்றுத்திட்டங்களை அமல்படுத்த அரசு உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கிறது.

கல்விக் கட்டண உயர்வை ரத்து செய்க!
தமிழகத்திலுள்ள மத்திய அரசு கல்வி நிலையங்களில் (சிபிஎஸ்இ) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக் கான கல்விக் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கணிசமாக உயர்த்தப் பட்டுள்ளது. இவற்றை ரத்து செய்ய வேண்டும். 

மனு கொடுக்க முதல்வர் எதற்கு?
தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் அனைத்துக் கட்சியைக் கூட்டி ஆலோசிக்கலாம். இல்லை, தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். இது இரண்டும் இல்லை. குறை தீர்க்கும் நாளில் மக்கள் மனு கொடுப்பது போல பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் மனுக் கொடுப்பதை மட்டுமே முதலமைச்சர் வேலையாக கொண்டுள்ளார். மனு கொடுப்பதற்கு முதலமைச்சர் எதற்கு? இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், பி.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;