திருவண்ணாமலை:
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் மற்றும் புதுச்சேரி என்ற முழக்கத்தோடு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வழியெங்கும் நடைபயண குழுவினருக்கு பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தாங்கள் மனங்களுக்குள், நீண்டநாள் கோரிக்கையாக, இருந்து வரும் எண்ணங்களை, பொதுவெளியில் கோரிக்கையாக கோஷமிட்டு வரும் மாதர் சங்கத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம் எள்ளுப்பாறை பாத்திமா என்ற இளம் பெண் கூறுகையில், “ தினசரி எள்ளுப்பாறை கிராமத்திலிருந்து, வேலூர் சாலைக்கு வியாபாரத்திற்கு வந்து செல்கிறேன். அப்போது, கிராமத்து அப்பாவி பெண்கள் பலர் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை பார்த்திருக்கிறேன். அதேபோல், போதையின் பிடியில் வரும் ஆண்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தற்போது மாதர் சங்கத்தின் கோரிக்கைகள் அமலாக்கப்படும் போது என்னைப்போல் பல பெண்கள் நிம்மதியடைவார்கள்” என்றார்.
வேலூர் சாலையில், பூக் கடையில் பணியாற்றும் விசு என்பவர் கூறுகையில், “டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்துவதற்கு அக்கறை காட்டும் தமிழக அரசு, கிராமப்புற மக்களுக்கு மருத்துவம், கல்வி,வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பூ உற்பத்தி மற்றும் வாழை உற்பத்தி செய்யும் விவசாயிகள், உற்பத்தி பொருட்களுக்கு விலையில்லாமல் தவித்து வருகின்றனர். விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்க, சேமிப்புகிடங்கு அமைக்க வேண்டும். மதுபோதைக்கு எதிரான மாதர் சங்கத்தின் நடைபயணம் பாராட்டுக்குரியது’’ என்றார்.
கலசப்பாக்கத்தை சேர்ந்த சுமதி என்பவர், ஏழை,எளிய குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் குடும்பத்தாராலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களாலும் கடுமையாக தாக்கப்படுகின்றனர். பெண்களை அடித்து மிரட்டினால் பயந்துவிடுவார்கள் என்ற எண்ணமே, அவர்கள் மீது வன்முறையை ஏவித் தூண்டுகிறது. எனவே, பெண்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.விண்ணுவாம்பட்டு சரஸ்வதி கூறுகையில் “ தினசரி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்க்கும் போது, 5 வயது குழந்தைகள் முதல், 60 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் மட்டுமின்றி, இந்த சமூகமே, வேதனை கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுத்துவரும், மாதர் சங்கத்தினருடன் கைகோர்த்து பெண்கள் அனைவரும் ஒன்றுகூடினால் விரைவில் தீர்வு ஏற்படும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார். இப்படி, செல்லும் இடமெல்லாம் மாதர் சங்கத்தின் கோரிக்கைகள் வெற்றியடைய பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் அவர்களை வரவேற்று உற்சாகப்படுத்துகின்றனர்.ஜெ.எஸ்.கண்ணன்