திருவண்ணாமலை, ஆக. 17- மழைநீரை பாதுகாக்கும் விதமாக செயல்படுத்தப்படும் திட்டமான ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் சீர்கேடுகளால், பில் சக்தி அபியான் திட்டமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தேசிய அளவில் மழைநீர் சேமிப்பை வலுப்படுத்த ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மழை நீரை சேமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள் பலனளிக்கவில்லை தோல்வியடைந்து விட்டது. ஜல்சக்தி அபியான் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு செலவாகும் தொகையை விட பலமடங்கு கூடுதலாக பில் போடப்பட்டு பணம் முறைகேடாக எடுக்கப்படுகிறது. அதிக அளவிலான ஊழல் நடைபெறுகிறது. ஜல்சக்தி அபியான் திட்டம், தற்போது பில் சக்தி அபியான் திட்டமாக மாறிப்போனது என்றனர்.