tamilnadu

பேருந்து கட்டணம் உயர்வு: சிபிஎம் கண்டனம்

திருவண்ணாமலை, ஜூன் 10- விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்துகளில் கட்டணம்  அதிகரித்துள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு கண்டித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்  இயக்கப்படும் அரசு விழுப்புரம் கோட்ட  நகரப் பேருந்துகளில் ஒரு ஸ்டேஜூக்கு ரூ. 7 லிருந்து 8 ஆகவும் ரூ.  10 லிருந்து 11 ஆகவும்  ஒவ்வொரு ஸ்டேஜிலும் கூடுதலாக ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ. 18 வசூலித்து வந்த கட்டணம், தற்போது 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சேலம் - காஞ்சிபுரம் இடையே இயக்கப்படும் பேருந்துகளில், செய்யாரி லிருந்து   திருவண்ணாமலைக்கு ரூ. 86 லிருந்து  96 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   இதேபோல், தடம் எண்  477 பெங்களூரூ  செல்லும் பேருந்தில்  திருவண்ணாமலையிலிருந்து செங்கத்திற்கு ரூ. 30 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ. 32 ரூபாயாக அதிகரித்துள்ளது.  திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் சுற்று வழியில் செல்கிறது. இதன் பொருட்டும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.  மற்ற கோட்டப் பேருந்துகளில் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போது ஒரு முறை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது, விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தில், பகல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் போக்குவரத்துக் கழக, மாவட்ட மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கருக்கலைப்பு சம்பவங்கள் இம் மாவட்டத்தில் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், உரிய விசாரணை நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாக மும், சுகாதாரத் துறையும் ஆய்வுக்கூடங்களை நடத்தி கண்காணிக்க வேண்டும். பெண் சிசுக்கள்  உயிர் இழப்பதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரணி பால் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தில், தண்ணீர் கலக்கப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தில் செயலாளர்கள்  மட்டுமே, குற்றவாளிகளாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த குற்றச்செயலில்,  மேல் மட்ட அதிகாரிகள் வரை  தொடர்பு உள்ளதாக தெரிய வருகிறது.  எனவே பால்வளத்துறை உரிய விசாரணை நடத்தி,  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கம் முன்பு  கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆரணி அருகே நடந்த மாவட்டக்குழு வட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.கண்ணன் தலைமை தாங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி, செயலாளர் எம். சிவக்குமார், மூத்த தோழர் வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.