tamilnadu

img

திருப்பூர் ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலைகள் கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதி மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், மே 3 – திருப்பூர் மாநகராட்சி தவிர்த்து ஊரகப் பகுதிகளில் உரிய கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மே 6ஆம் தேதிமுதல் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு: மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.

15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். ஊரக, நகரப்பகுதிகளில் தொழிற் நகரியகங்கள், தொழிற்பேட்டைகள் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதியில் உள்ள தொழிற் பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

மின்னணு வன்பொருள் உற்பத்தி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.  நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.

மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம். நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

சிறு, குறு தொழில்கள் ஊரக பகுதிகளில் தொடங்க உரிய விதிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.  மேலும், மாநகராட்சி பகுதிகளைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள், அனுமதிகள் தொடரும். இவையாவும், கட்டுப்பாட்டு பகுதிக்கு பொருந்தாது.  அப்பகுதியினுள் உள்ள நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் இயங்க அனுமதி இல்லை. மேலும், கட்டுப்பாட்டு இல்லாத பிற பகுதிகளில் உள்ள மேற்சொன்ன இனங்களில் கண்டுள்ள நிறுவனத்தினர், தொழிற்சாலையினர் இது தொடர்பாக அனுமதி வேண்டி விண்ணப்பிப்பதாயின், மாநில அளவில் இதற்கென துவக்கப்பட்டுள்ள ஒற்றைச்சாளர மூலம் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்களின் பேரில், உரிய கள ஆய்வு மேற்கொண்ட பின்னரும், கட்டுப்பாட்டு பகுதியில் இல்லாதவை குறித்து உறுதி செய்து கொண்ட பின்னரும், மாவட்ட ஆட்சியர் பரிசீலனைக்குப் பின் உரிய அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறினார்.

;