tamilnadu

வலுவான பிரதமர் மோடி வர வேண்டும்: இபிஎஸ் ஐயோ, ஆள விடுங்க சாமி! தெறித்து ஓடிய மக்கள்

 திருப்பூர், ஏப். 10 –மோடியின் தாக்குதலால் நொந்து போயிருக்கும் திருப்பூருக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “வலுவான பிரதமர் மோடி மீண்டும் வர வேண்டும், அதற்கு அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.இதைக் கேட்ட பொதுமக்கள் ஏற்கெனவே வலுவான பிரதமரின் துல்லியத் தாக்குதலால் நாங்கள் நிலைகுலைந்து நிற்கிறோம். ஐயோ, ஆளை விடுங்க சாமி! என்று சொல்லியவாறு கலைந்து சென்றனர்.திருப்பூர் பாண்டியன்நகரில் செவ்வாயன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மோடி வலுவான பிரதமர், மீண்டும் அவர் வருவதற்கு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். அப்போது இப்பகுதி டீக்கடையில் நின்றிருந்தவர்கள் இதைக் கேட்டு, “ஏற்கெனவே செல்லா பண விவகாரத்தில் நம்மை அலைக்கழித்து சீரழித்த மோடியின் வலுவைப் பார்த்தோம். அதோடு ஜிஎஸ்டி வரியைப் போட்டு இங்கிருக்கும் பனியன் தொழிலைத் துல்லியமாகத் தாக்கியதையும், அதனால் நாங்கள் வேலையிழந்து பட்ட பாட்டையும் மறக்க முடியாது. இவரைத் திரும்பக் கொண்டு வந்தால் எங்கள் பாடு அதோ கதிதான்! ஐயோ ஆளை விடுங்க சாமி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.


இவர்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து முழங்கிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, நடைபெற இருப்பது நாடாளுமன்றத் தேர்தல், யார் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல்! எனவே அதைப் பற்றித்தான் பேச வேண்டும், ஆனால் எதிர்க்கட்சிகள் அதைப் பற்றி பேசாமல், எங்களை விமர்சிக்கிறார்கள் என்று குறைபட்டுக் கொண்டார். ஆனால், நாட்டை மோடி மீண்டும் ஆள வேண்டும் என்று இவர் சொல்வதற்கு, கடந்த ஐந்தாண்டுகளில் மோடி நாட்டுக்கு என்னென்ன நல்லது செய்தார் என்று எடப்பாடி சொல்லவில்லை. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி இரண்டும் மோடி நாட்டுக்குச் செய்த நல்ல விசயம் என்று நினைத்தால் அதைப் பற்றி எடப்பாடி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றி அவர் மூச்சுகூட விடவில்லை.எதிர்க்கட்சிகளை குறை சொன்ன எடப்பாடி, தமிழக உரிமைகளை நிலை நாட்ட, மத்திய அரசிடம் என்னென்ன விசயங்களை அதிமுக வலியுறுத்திப் பெற்றுத் தந்தது, பாஜக தமிழகத்துக்கு என்னென்ன சாதனைகளைச் செய்தது என்பது பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக அதிமுகவின் 37 எம்.பிக்கள் இருந்தும், மோடி அரசிடம் என்ன கோரிக்கைகளை பெற்றார்கள், என்ன சாதித்தார்கள் என்பதைப் பற்றியும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மற்றவர்களைக் குறை சொல்லிவிட்டு, தனது அரசின் சாதனைகள் என்று எதையும் சொல்லமுடியாமல் எடப்பாடியும் எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசுவதிலேயே நேரத்தைச் செலவிட்டார். 

;