tamilnadu

img

நெல்லையில் இலங்கை அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்த கே.பாலகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அராஜகம்

நெல்லை,டிச.22-  நெல்லையில் உள்ள இலங்கை அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உட்பட 6 பேர் மீது நெல்லை மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  காவல்துறையினரின் இத்தகைய அராஜகச் செயலுக்கு  கட்சியின் நெல்லை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கடந்த 21.12.2019 அன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியும் முகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச்செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, பாளை தாலுகாச் செயலாளர் வரகுணன் மற்றும் கோபாலன், கருணா ஆகியோர் சென்றிருந்தனர். மேற்கண்ட ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதை கட்சியின்  நெல்லை மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  அகதிகள் முகாமிற்கு மாநில அரசு அனுமதியின்றி செல்லக்கூடாது என மாநில அரசு அறிவுரைக்கு எதிராக நடந்து கொண்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. இந்த நாட்டில் வாழும் மக்களை யாருடைய அனுமதியும் பெற்று சந்திக்க வேண்டியதில்லை. அவர்களது குறைகளை கேட்டறிய அரசின் அனுமதி பெற வேண்டுமென்கிற அறிவுரை ஒன்றும் சட்டமல்ல. அகதிகள் முகாமுக்குள் செல்லக் கூடாது எனில், அது என்ன திறந்தவெளி சிறைச்சாலையா என கேட்க விரும்புகிறோம்.  காஷ்மீருக்குள் செல்ல தடை விதிப்பதைப் போல, அகதிகள் முகாமுக்குள் செல்ல தடை விதிப்பது ஏன் என்று கேட்க விரும்புகிறோம். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதும் குற்றமெனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. அரசின் சட்ட திட்டங்களின் சாதக, பாதகங்களை பேசுவதும் விமர்சிப்பதும் அரசியல் உரிமை. அதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது என்பதே சட்டத்திற்கு விரோதமான காரியமாகும். மோதலை தூண்டிவிடுவதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் பிரச்சனைகளை பேசுவதே தூண்டிவிடுவதாக பதிவு செய்வது காவல்துறையின் அடக்குமுறையை எடுத்துக் காட்டுகிறது. வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.