tamilnadu

அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் பெண் பலி

சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் மறியல்

கும்பகோணம், நவ.11- கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா வயது 32. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கருவுற்ற அவர், நரசிங்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று கடுமையான பிரசவ வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற உமாவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவர்கள் உமாவிற்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் உமா, ரத்தப் போக்கால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவர்கள் சரி வர சிகிச்சை அளிக்காததால் உமா பரிதாபமாக இறந்தார் எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கோவிந்தபுரம் கிராம மக்கள், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் தமிழருவி விவேகானந்தன் வழக்கறிஞர் பாலகுரு, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் டிஆர் லோகநாதன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

உமா இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவர்களையும், செவிலியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன உமாவிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இது போன்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை சரி வர இல்லாமல் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;