tamilnadu

img

வேளாங்கண்ணியில் 24 மணி நேர முதலுதவி மையம் திறப்பு

திருச்சி, செப்.1- நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம் உலகளவில் பிரசித்தி பெற்றது. இங்கு வருடாந்திர விழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித ஆரோக்கிய அன்னையின் அருளாசிகளை பெற்றுச் செல்வர். பக்தர்களின் நலனுக்காக வேளாங்கண்ணி கடற்கரையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை 24 மணி நேர விபத்து மற்றும் அவசர கால மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மருத்துவர் குழு மற்றும் செவிலியர்கள் மூலம் 24 மணி நேரமும், கடல் அலைகளால் பாதிக்கப்படுவோர், மூச்சுத் திணறல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இலவச மருத்துவ முதலுதவி மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. மேலும் உயர் சிகிச்சை தேவைப்படுவோரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில் ஹைடெக் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வென்டிலேட்டர் சுவாச கருவி, கார்டியாக் மானிட்டர், செயலிழந்த இதயத்தை துடிப்பூட்டும் நவீன கருவிகள் அனைத்தும் இந்த ஹைடெக் ஆம்புலன்ஸில் உள்ளன. இத்தகைய ஹைடெக் ஆம்புலன்ஸ் நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளில் செயல்படுவது இதுவே முதன் முறை. இந்த நவீன ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி மையத்தை நாகை ஆட்சியர் சுரேஷ் குமார் துவக்கி வைத்தார். தஞ்சை மீனாட்சி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் சரவணவேல், முதலுதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். கீழ்வேளூர் வட்டாட்சியர் கபிலன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரெங்கன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பூபதிகுமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். பேரூராட்சி மூலம் மத்திய அரசின் புராதன நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதலுதவி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

;