திருச்சிராப்பள்ளி, ஆக.29- திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் தீர்மானித்தபடி கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க வேண்டும். திடீர், திடீரென மணல் மாட்டு வண்டி குவாரிகளை மூடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க லால்குடி ஒன்றியக்குழு சார்பில் லால்குடி ரவுண்டானா அருகில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் செவ்வாய் அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர். அன்பு, கரிகாலன், சண்முகம், பழனிவேல், மணிகண்டன், லோகர், வெங்கடேசன், சின்னதுரை உள்பட 100க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.