ஈரோடு,மே 21-ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் 23ம் தேதிக்குள் தங்களது பள்ளியின் அங்கீகாரம் உள்ளிட்ட முழு விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) என்பது கல்வி நிறுவனங்கள் சார்ந்த தரவுகளை நிர்வகித்தல் மற்றும் தகவல்களை வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களை சேகரித்தல் செயலாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் எமிஸ் இணையதளத்திற்கு சென்று அந்தந்த பள்ளிகள் தங்களது முழு விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகள் இப்பணிகளை 90 சதவிகிதம் முடித்துவிட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் உட்படமாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான தனியார்பள்ளிகள் தங்களது அங்கீகார ஆணை மற்றும் அதுகுறித்த விவரங்களை பதிவு செய்யாமல் உள்ளதாகபள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் இதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக வருகின்ற 23ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் தங்களது முழுவிவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எமிஸ் தகவல்களை ஆய்வு செய்த பொழுது மழலையர் பள்ளி, நிதி உதவி பெறும் மற்றும் சுயநிதி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வகுப்புகள் தொடங்குவதற்கு அனுமதி அங்கீகாரம், தற்காலிக தொடர் அங்கீகாரம் போன்ற ஆணை விவரம் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என தெரியவந்தது. எனவே அனைத்து மாவட்டத்திலும் அனைத்து தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த ஆணைகள் உட்பட அனைத்து விவரங்களையும் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை வருகின்ற 23ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் இதை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.