tamilnadu

img

குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை, ஜூலை 10- புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மட்டும் 725 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.27.50 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறந்தாங்கிப் பகுதிகளில் குடிநீர்த் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:  புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையின் அடிப்படையில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்திட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பாண்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மட்டும் 725 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.27.50 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதில், 525 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இதேபோன்று காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு  நாள் ஒன்றுக்கு 72 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் 26 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10 பணிகள் முடிவுற்றுள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டில் இதுவரை 5 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.73.65 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விரைவில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

;