tamilnadu

img

தரமற்ற சாலை அமைக்கும் ஒப்பந்தகாரரை மாற்றக் கோரி கந்தர்வகோட்டை அருகே சிபிஎம் சாலை மறியல்

புதுக்கோட்டை, செப்.27- தரமற்ற சாலை அமைக்கும் ஒப்பந்த காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடை பெற்றது. கந்தர்வகோட்டை அருகே கல்லு ப்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து நத்தமாடிப்பட்டி வரை வரை பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ்ச் சுமார் 7 கிலோ மீட்டர் அளவுக்குத் தார்ச்சாலை அமைக்கக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.2 கோடியே, 21 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் இந்தச் சாலைக்கான ஒப்பந்தத்தை எம்.முருகேசன் என்பவர் எடுத்துள்ளார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒப்பந்தம் போடப்பட்ட சாலை கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சாலை மிகவும் தரமற்று உள்ளதாகக் கூறிப் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சாலையைத் தரமாக அமைக்க வலியுறுத்திச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாகக் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் முன்னிலையில் சாமாதானக்கூட்டமும் நடைபெற்றது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்தக் காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கான ஒப்பந்தத்தை ரத்துசெய்து வேறுநபருக்கு புதிதாக ஒப்பந்தம் போட வேண்டும் என வலியுறுத்திக் கந்தர்வகோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதானச் சாலையில் கல்லுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பேராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சித்திரைவேல், கல்லுப்பட்டி கிளைச் செயலாளர் ஆர்.மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். அழகன், சைவராஜ், சங்கிலிமுத்து, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கிக் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  க.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.ரத்தினவேல் ஆகியோர் உரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.வீராச்சாமி, பி.மணி, வி.இயைராஜா மற்றும் இதர அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர் செந்தில், வட்டார வளர்;ச்சி அலுவலர் நேசமணி, காவல் ஆய்வாளர் சிங்காரவேல் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக வரும் திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண்பது, அதற்கு முன்பாகச் சம்மந்தப்பட்ட சாலையைக் கோட்டாட்சியர் ஆய்வு செய்வது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் காரணமாக மேற்படி பிரதானச் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

;