tamilnadu

img

திருச்சி பெல் வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை

திருச்சிராப்பள்ளி:
திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் தொழிற்சாலை வளாகத்தில் மெயின் கேட்டுக்கு வெளியே பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் மூலம் தான் பெல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.இந்நிலையில் வங்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.43 கோடி வெள்ளியன்று கொள்ளை போனதாக தகவல் பரவியது. இந்த வங்கிக்கு அருகில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு பெல் ஊழியர்கள் தவிர வெளிநபர்களும் இருச க்கர வாகனத்தை நிறுத்துவார்கள். இந்த இடத்தை தாண்டி வங்கி மற்றும் ஆலைக்குள் பெல் தொழிலாளர்கள் மட்டுமே செல்ல முடியும். இந்நிலையில் மர்மநபர்கள் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அருகில் உள்ள வங்கி சுவரில் இருந்தஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வங்கியில் வைக்கப் பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்தனர். இது பற்றி தகவலறிந்த திருச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் மற்றும் திருவெறும்பூர் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். 

முதற்கட்டமாக வங்கியின் காசாளர் லெட்சுமியிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது சம்பளம் போடுவதற்காக வியாழனன்று பேக்கில் ரூ 1.50 கோடி ரொக்கம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் ரூ 7 லட்சம் வினியோகம் செய்தது போக மீதம் ரூ 1.43 கோடி பேக்கில் இருந்தது. வியாழனன்று லாக்கர் சாவி வேலை செய்யாததால், எனது அறையிலேயே பணம் இருந்த பேக்கை வைத்து விட்டு சென்றேன். வெள்ளியன்று காலை வந்து பார்த்த போது பணம் இருந்த பேக் காணவில்லை என காசாளர் லெட்சுமி தெரிவித்துள்ளார்.அடுத்த கட்டமாக வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரெயின் கோர்ட், முகமூடிஅணிந்த ஒரு நபர் ஜன்னல் வழியாக வங்கிக்குள் புகுந்து நடமாடுவது பதிவாகி உள்ளது. அந்த நபர்தான் பண பேக்கை திருடி சென்றுள்ளார். அந்த நபர் யார்? வங்கிக்குள் புகுந்த கொள்ளையனுக்கு உதவியாக வெளியில் யாராவது இருந்தார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் சமீபத்தில் பிரபல நகைக் கடை, பஞ்சாப் நேஷனல்வங்கி என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது கூட்டுறவு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது பொது மக்களை அச்சமும், அதிர்ச்சியும் அடையச் செய்துள்ளது. 

;