tamilnadu

img

குடிநீர்த் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மூடப்படாத பள்ளத்தால் விபத்து அபாயம்

சீர்காழி, ஏப்.29-கொள்ளிடம் அருகே கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக மாதிரவேளுர் பஸ் நிறுத்தத்திலிருந்து அக்ரஹாரம் தெரு வழியாக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருந்தகம் வரை செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிப்பதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் செல்வதற்காக பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் முறையாக குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை. ஆறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளத்தில் முறையாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால் சாலையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அடிக்கடி சாலையில் உள்ள பள்ளங்களில் சைக்கிளில் செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் பலர் இந்த குழிகளில் நடந்து வரும் போது தடுமாறி விழுகின்றனர். எந்த பயனுமின்றி தண்ணீரும் இதுவரை வழங்காமலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அரைகுறையாகவும் விடப்பட்ட தண்ணீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் வழங்கவும் பள்ளத்தை உடனடியாக மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

;