tamilnadu

img

கொடைக்கானலில் பூங்காக்கள் திறப்பு... சுற்றுலாப் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு...

கொடைக்கானல்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மூடப்பட்டிருந்த கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடந்த 75 நாட்களுக்குப் பிறகு திங்களன்று திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இ-பதிவு முறையை தமிழக அரசு ரத்து செய்தது. இதனால், கொடைக்கானல் சென்றுவர தடையில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகியவை திறக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் அறிவித்தனர்.இதையடுத்து திங்களன்று காலை முதல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இவர்களை தோட்டக்கலைத் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். உடல் வெப்பநிலை சோதித்த பிறகே சுற்றுலாப் பயணிகளை பூங்காவுக்குள் அனுமதித்தனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா மலர் கண்காட்சிகள் நடைபெறாத நிலையில், பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

அடுத்தகட்டமாக தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் நிலையில், கோக்கர்ஸ்வாக், படகு சவாரி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் பாய்ண்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்பட வாய்ப்புள்ளது.

;