பென்சில் சீவும் ஷார்ப்னருக்கு 12 சதவீதமும், வைரத்திற்கு ஒன்றரை சதவீதமும் வரி போட்ட அதி மேதாவிகள் என்று மோடி அரசை முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி கிண்டலடித்துள்ளார்.
திண்டுக்கல்லில் புதன் வியாழக்கிழமைகளில் நத்தம் சாலையில் உள்ள மகாலிங்க நாடார் திருமண மண்டபத்தில் நடைபெறும் 12 வது மாதர் சங்க மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார். அதில் பாஜக அரசு போடும் வரிக்கொள்கையை கிண்டலடித்து பேசியதாவது.
அரிசிக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி போட்டால் கிலோ ரூ.150க்கு தான் விற்கும். அரிசி விலை கூடும் போது எந்த வேலை வாய்ப்பும் இல்லாதவர்கள் விவசாய கூலி வேலைக்கு போகிறவர்கள். பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள், கட்டட வேலைக்கு போகும் பெண்கள் என சாதாரண ஏழை பெண்கள் எப்படி நல்ல அரிசியை வாங்கி சாப்பிட முடியும். மோடி அரசின் இந்த விலை உயர்வை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அரிசிக்கு போடப்பட்ட 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். அரிசிக்கு மட்டுமல்ல பருப்பு, தயிர் போன்ற உணவு பொருட்களுக்கும் வரி போட்டுள்ளது. நாங்கள் தான் உலகத்தில் மிகப்பெரிய பொருளாதார வல்லுநர்கள் என்று சொல்லக்கூடிய ஒன்றிய பாஜக அரசு வைரம் வைத்திருக்கிறவர்களுக்கு ஒன்றரை விழுக்காடு வரி போட்டுள்ளது. ஆனால் பள்ளிக்குச் செல்லும் மாணவியின் பென்சில் சீவும் ஷார்ப்னருக்கு 12 சதவீத வரி போட்டுள்ளது. அந்த ஷார்ப்னரில் உள்ள சின்ன இரும்பு துண்டுக்காக போட்டுள்ளனர். தயிருக்கு வரி போட்ட இது போன்ற பாஜக பொருளாதார அதிமேதாவிகளை உலகத்தில் எங்காவது பார்க்க முடியுமா? மேலும் சிலிண்டர் விலையையும் கூட்டி மக்களை வாட்டி வதைப்பதையே மோடி அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்று கே.பாலபாரதி பேசினார்.