tamilnadu

img

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திடுக

தாராபுரம், மே 31-அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி தாராபுரம், மூலனூரில் வெள்ளியன்று வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.தமிழகத்தில் விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. மூலனூரில் தொடங்கிய பிரச்சாரத்தைத் தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர்பேசுகையில், அரசுப்பள்ளிகளின் தரம், வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். மூலனூர் அண்ணாநகரில் நடைபெற்ற வாகனப் பிரச்சாரத்தில் உடுமலை துரையரசன் கலைக்குழுவினர் அரசு பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் சலுகைகள், பள்ளியின் தரம் குறித்து பாடல்கள் பாடி பிரச்சாரம் செய்தனர். அதேபோல் தாராபுரத்தில் தாலூகா அலுவலகம், நாடார்தெரு, பொள்ளாச்சிரோடு பகுதிகளிலும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குண்டடம் உதவி தொடக்க கல்வி அலுவலர் நடராஜன், மூலனூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியர் குப்புசாமி உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பிரச்சாரத்தின்போது துண்டுப் பிரசுரங்களை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில்சேர்ப்போம் என உறுதி கூறினர். மேலும்  இப்பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.