tamilnadu

img

பச்சை மூங்கில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தருமபுரி, மே 21-மஞ்சவாடி கணவாயில் மூங்கில் மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், மஞ்சவாடி கணவாய் சேர்வராயன் மற்றும் கல்ராயன் மலைகள் சந்திக்கும் இடமாகும். இப்பகுதியில் தொடர்ச்சியாக தனியார் கும்பல் பச்சை மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதை பார்த்த நாங்கள், கடந்த 18 ஆம் தேதி அங்கு சென்று மரம் வெட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், பச்சை மூங்கில் மரங்களுடன் இருந்த 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், கடந்த ஆண்டும் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் காய்ந்த மூங்கில் மரங்களை வெட்டுவதற்கு டெண்டர் எடுத்துள்ள சிலர், பச்சை மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விசாரணை குழு அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட பச்சை மூங்கில் மரங்கள் எத்தனை என்பதை கணக்கெடுக்க வேண்டும். மரக்கடத்தல் கும்பல் மீதும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீதும், குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மரங்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

;