பென்னாகரம், மே 18-பென்னாகரம் ஒன்றியம் பருவதமலை ஊராட்சி கள்ளிப்புரம் கிராமத்தில் சாக்கடையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் பருவதமலை ஊராட்சி பகுதியில் உள்ள கள்ளிபுரம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் கழிவு நீர் கால்வாய் வழியாக கொண்டு சென்று, பிரதான கழிவு நீர் கால்வாயில் கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பெருமளவு இப்பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடையில் குவிந்துள்ளதால் கழிவு நீர் வெளியேறாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது.இதனால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகமாகிறது. இதனால் பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை தூர்வாரி பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.