தருமபுரி, அக்.24- தருமபுரி ஜாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தின்னஅள்ளி கிராம ஊராட்சி எல்லையில், ஜாலாறு என்ற சிற்றாறு செல்கிறது. மழைக்காலங்களில் வத்தல்மலை அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் போது, ஜாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். தற்போது பெய்த மழை காரணமாக, ஜாலாற்றில் வழக்கத்திற்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது. இதனால் பூமரத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆபத்தான முறையில் ஜாலாற்றை கடந்து மறுகரைக்கு செல்கின்றனர். எனவே ஜாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.