tamilnadu

img

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கும் சைக்கிள் பிரச்சாரத்தில் ஓர் இளம் விஞ்ஞானி

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக அரசுப் பள்ளிகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் முழுவதும் 1,500 கிலோமீட்டர் சைக்கிள் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.இந்த உயரிய நோக்கத்திற்காக தமிழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 300 மாணவர்கள் வரை தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து பங்கேற்றுள் ளார்கள். பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாண வர்கள் பங்கேற்று வருகிறார்கள். விளை யாட்டு, கலை, இலக்கியம், பேச்சு, நடனம், அறிவியல் என பல துறைகளில் சாதனை படைத்த மாணவர்களும் பங்கேற்று வருகிறார்கள்.இந்த மாபெரும் இயக்கத்தில் இதன் ஒரு பகுதியாக கோவையில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணக் குழுவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மாணவ விஞ்ஞானியாக தேர்வாகியுள்ள  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வி.எஸ். பவித்ரா எனும் மாணவியும் ஒருவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பவித்ரா தனது பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அறிவியல் கண்காட்சியில் ஆர்வமாக பங்கேற்கத் துவங்கி 2016-17 இல் பதினோராம் வகுப்பு படிக்கும்போது தமிழக அளவில் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

தொடர்ந்து இஸ்ரோவின் மாணவவிஞ்ஞானிகளை தேர்வு செய்யும் “யுவிகா’ திட்டத்தில் தமிழகத்தில் ஏழு மாணவர்களில் ஒருவராக தேர்வாகி யுள்ளார். தற்போது மாணவர்கள் இணைந்து உருவாக்கக்கூடிய ஏவு கணைத் திட்டத்தில்  ஒருவராக செயல் பட்டு வருகிறார். இந்திய மாணவர் சங்கத்தின் இயக்கத்தில் உத்வேகம் பெற்று சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள பவித்ரா விடம், அரசுப் பள்ளியை ஏன் தனியாரிடம் தத்துக் கொடுக்க கூடாது எனக்கேட்ட போது “நான் எனது பள்ளி யில் படிக்கும்போது அறிவியல் மட்டுமல்ல; நடனம், சதுரங்கம், கேரம் போன்றவற்றில் ஆர்வமாக இருந்தேன். அரசுப்பள்ளி என்றாலே உடைந்த கரும்பலகை ‘சிதலமடைந்து போன கட்டிடம் என்பது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையில் சில அடிப்படை பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாணவர்கள் படிக்கவேமுடியாது என்பதைப் போல் அல்ல. எனதுபள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் இருக்கின்றன; என் இயற்பியல் ஆசிரியைஎனக்கு புதுமையான பல அறிவியல் துறையை பற்றிக் கூறியுள்ளார். என்னை யாரும் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது இல்லை. நானே எனது விருப்பப்படி மட்டுமே படித்து எனது பன்னி ரண்டாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளேன். இப்படியான வாய்ப்புகள் தனியார் பள்ளியில் இருக்குமா? நான் ஒரு எந்திரமாக வாழ வேண்டுமா? எந்திரத்தை ஆளுபவராக வாழ வேண்டுமா?” என எதிர்கேள்வி கேட்டுக் கொண்டே சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் இளம் விஞ்ஞானி வி.எஸ். பவித்ரா.

- க.நிருபன் சக்கரவர்த்தி

;