tamilnadu

img

தோழர் டி.செல்வராஜ்- சில நினைவுகள் - என்.ராமகிருஷ்ணன்

சமீபத்தில் மறைந்த பிரபல நாவலா சிரியரும், வழக்கறிஞருமான அருமைத் தோழர் டி.செல்வராஜ் அவர்களை, கடந்த 58 ஆண்டுகளாக நான்  நன்கறிவேன். 1961ஆம் ஆண்டில் சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின்  ‘ஜனசக்தி’ நாளிதழில் ஊழியராகச் சேர்ந்ததிலிருந்து எனக்கு அவருடனான அறிமுகம் தொடங்கியது. அச்சம யத்தில் அவர் ஜனசக்தியின் உதவி ஆசிரியராவார். கட்சியின் இலக்கிய ஏடான ‘தாமரையில்’ அவர் எழுதி யிருந்த சிறுகதைகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். நான் ‘ஜனசக்தி’யில் எழுத்தராகவும், பின்னர் காசாளராகவும் இருந்தேன். அதன் பின் செய்திக் களஞ்சிய (நூலகர்) பொறுப்பாளர் ஆனேன். இந்தப் பணி காரணமாக நான் ஆசிரியர் குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜனசக்தியின் ஆசிரியர் தோழர் ஜீவா அவர்கள். பொறுப்பாசிரியர் தோழர்  கே.முத்தையா, ஆசிரியர் குழு உறுப்பி னர்களான மாஜினி, வி.ராதா கிருஷ்ணன். கே.ராமனாதன், டி.செல்வராஜ், ஐ.மாயாண்டி பாரதி, சோலை, நாகர்கோவில் தியாகராஜன் போன்றோர் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள். ஆசிரியர் குழுக் கூட்டங்களில் தன் கருத்தை எளிமையாக விளக்கு வார். ஒரு வார கால செய்திகளில் எந்தெந்த  செய்திகள் சிறப்பாக இருந்தது. எவையெவை சிறிது மாற்றப்பட்டி ருக்கலாம் என்பதையெல்லாம் சுருக்க மாகக் கூறுவார். அனைவரும் அவர் சொல்வதை கூர்ந்து கவனிப்பார்கள். இக்கால கட்டத்தில் நான் அவருடன் நெருங்கிப் பழகினேன். அவருக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எவ்வாறு தொடர்பு  ஏற்பட்டது. எவ்வாறு அவர் இலக்கியவாதி யானார் என்பது குறித்தும் இச்சமயத்தில் அவரிடமிருந்து அறிந்து கொண்டேன்.

நெல்லையில் அவர் இந்துக் கல்லூரியில் படித்த பொழுதுதான் இந்த இரண்டு தொடர்புகளும் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றன. நெல்லை நகரம் என்பது அக்காலத்தில் கம்யூனிஸ்ட் அறிவுஜீவிகளின் மையமாகவும், மார்க்சிய இலக்கியவாதிகளின் மைய மாகவும் இருந்தது. பேராசிரியர் நா.வான மாமலை, தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமி எழுத்தாளரும், பதிப்பாளருமான சிந்துபூந்துரை அண்ணாச்சி சண்முகம், இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் போன்றோர் பிரபலமான கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள். அதேபோல் என்.டி.வான மாமலை, பாளை சண்முகம், கார்த்தீசன் போன்ற கம்யூனிஸ்ட் வழக்கறிஞர்கள் மிகப் பிரபலமாக இருந்தார்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.மாணிக்கம் மற்றும் நகரச் செயலாளர் சு.பாலவிநாயகம் ஆகியோர் சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்கள் ஆவர். இவர்கள் அனைவருடனான நெருங்கிய நட்பு செல்வராஜை கம்யூனிஸ்ட்டாகவும், கம்யூனிஸ்ட் இலக்கியவாதியாகவும் மாற்றியது.

பட்டப் படிப்பிற்குப் பின் சென்னை சட்டக் கல்லூரியில் படித்த செல்வராஜ் அந்தப் படிப்பை முடிக்காமலே தலைவர் ஜீவாவின் தாக்கத்தினால் ‘ஜனசக்தி’ உதவி ஆசிரியராகி விட்டார். அது அவருடைய இலக்கியப் பணிக்கு மிகுந்த உதவியாக இருந்தது.  அவர் மிகப் பெரிய படிப்பாளி. ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்த அனைத்து சிறந்த நூல்களையும், இலக்கியங்களையும் படித்தவர். ஆனால் தன்னை முன்னிலைப்படுத்தி எப்பொழும் பேசியதில்லை. அவர் அவ்வளவு பெரிய படிப்பாளி என்பது ஒரு சிலருக்குத் தான் தெரியும். அந்தத் திறமையில் மறைந்த எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.கே.கண்ணன் போன்ற மார்க்சிய அறிவு ஜீவிகளுடன்தான் அவரை ஒப்பிட முடியும்.

1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. நானும், டி.எஸ்.தினகரன் மற்றும் சூரிய நாராயணன் போன்ற தோழர்களும் ‘ஜனசக்தி’யில் நீடிக்க முடியவில்லை. செல்வராஜ் மேலும் சில மாதங்கள் அங்கிருந்தார். பின்னர் வெளியேறியவர், அவர் முடிக்காமல் விட்ட சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞரானார்.  1966 ஆம் ஆண்டில் சென்னை தி.நக ரில் உருவாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையில் அவர் உறுப்பினரானார். பின்னர் அதே கிளையில் நானும், கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட நான்கு தோழர்களும் சேர்க்கப்பட்டோம். மூத்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் தோழர் வி.வெங்கட்ராமனிடம் ஜூனியராகச் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். பின் திண்டுக்கல் தொழிற்சங்கத் தலைவர் தோழர் எஸ்.ஏ.தங்கராசன் செய்த ஏற்பாட்டின்படி திண்டுக்கல்லில் வழக்கறிஞர் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். அத்துடன் அவருடைய எழுத்துப் பணியை தொடர்ந்தார். பெரிய குளத்தில் நடைபெற்ற அவரது திருமணத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

1988 ஆம் ஆண்டிலிருந்து நான் எழுதிவந்த வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அரசியல் வரலாறுகளை படித்து வந்த செல்வராஜ் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அன்றிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களை நேர்காணல் கண்டும், விபரங்களை சேகரித்தும் “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு” என்ற நூலை நான் எழுத வேண்டுமென அவர் ஆலோசனை கூறியிருந்தார். அவர் கருத்து எனக்கு உற்சாகமளித்தது. மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், குறிப்பாக தோழர்கள் ஏ.நல்லசிவனும், என்.வரதராஜனும் பெரும் உற்சாகமளித்தார்கள். இவை அனைத்தின் விளைவாக வெளிவந்ததுதான் “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் கடைசி வரிசையில் தோழர்கள் செல்வராஜ் மற்றும் கு.சின்னப்ப பாரதி ஆகியோருடன் நானும் அமர்ந்திருந்த போது தோழர் செல்வராஜ் என்னைப் பார்த்து கூறினார். “நீங்கள் வாழ்க்கை வரலாறுகளாக எழுதுங்கள், நாங்கள் அவற்றை இலக்கிய மாக்குகிறோம்”என்றார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. நான் எழுதியிருந்த “ஏ.பாலசுப்ரமணியம் - வாழ்வும் பணியும்” என்ற நூலை ஒரு சிறு ஆதாரமாகக் கொண்டு ‘தோல்’ என்ற புகழ்பெற்ற நாவலை அவர் எழுதியுள்ளார் என்று, நான் எழுதிய ஏ.பி.வாழ்க்கை வரலாற்றில் சுண்ணாம்புக் குழியில் மணிக்கணக்காக நின்று தோல்களை தோல் பதனிடும் தொழிலாளிகள் சுத்தம் செய்வது, அவர்களின் துயரமிக்க அவல வாழ்க்கை, அவர்களைத் திரட்டிப் போராடி அவர்களுக்கு ஏ.பி.அவர்கள் உரிமை பெற்றுத் தந்தது போன்றவற்றை விவரித்திருந்தேன். அந்த சிறு வாழ்க்கை வரலாறும் ‘தோல்’ நாவலை எழுத செல்வராஜூக்கு தூண்டுதலாக இருந்தது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

தோழர் செல்வராஜ் அவர்களின் மகத்தான சாதனையாகக் கருத வேண்டியது அவரது தொழிலாளி வர்க்க நாவல்கள். தொழிலாளி வர்க்க லட்சியத்திலிருந்து எழுதப்பட்ட நாவல்கள் என்பது இந்தியாவில் மிகக்குறைவு. நடுத்தர வர்க்கம் மற்றும் குட்டி பூர்ஷ்வா மனோ விருப்பங்கள், விரக்திகள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்களே அதிகமாக வந்திருக்கின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம், அந்த உழைப்பாளி மக்களின் வாழ் நிலைமைகள், எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள் மிகக்குறைவு. அத்தகைய நிலைமையில் தமிழகத்தில் மட்டும் ஒளிக் கீற்றுகளாக தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, செல்வராஜின் ‘மலரும் சருகும்’, ‘தேனீர்’ போன்ற முற்போக்கு நாவல்கள், சோலை சுந்தர பெருமாளின் ‘செந்நெல்’ போன்ற வர்க்க நாவல்கள் வெளிவந்து தமிழக முற்போக்கு இலக்கியத்திற்கு பெருமை சேர்த்துள்ளன. 

தோழர் செல்வராஜ் அவர்களின் மிக முக்கியமான அம்சம் ஒன்றை நான் அவசியம் சுட்டிக்காட்ட வேண்டும். அவர் ஒரு உறுதி மிக்க கம்யூனிஸ்ட். மார்க்சிய லட்சியம் ஒன்று தான் மனித குலத்தை உய்விக்கும் என்ற லட்சியத்தை உயர்த்திப் பிடித்தவர். அதற்கு ஒரு உதாரணம். 1990 ஆம் ஆண்டில் சோவியத் நாடு சிதறுண்ட போது இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் சோசலிசத்தின் மீது நம்பிக்கை இழந்து சோர்ந்து விட்டனர். ஆனால் தோழர் செல்வராஜ், மார்க்சியம் எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தது என்ற உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தி அதன் பின்னர் அவர் எழுதியதுதான் ‘தோல்’ என்ற வர்க்கப் போராட்ட நூல். அது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றுள்ளது. அதன் பின்னர் அடுக்கம் என்ற நாவலையும் அவர் எழுதியுள்ளார். இதுதான் தமிழ் இலக்கிய உலகில் அவரை தலை நிமிர்ந்த எழுத்தாளராக திகழச் செய்கிறது.

;