tamilnadu

img

காணாமல் போன பெண்கள், குழந்தைகளின் கதி என்ன?

சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் நூறு நாட்களுக்கும் மேலாகிறது. எனினும் அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்பது குறித்து எதுவும் வெளியாகவில்லை. காவல்துறை என்ன செய்கிறது என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. முகிலன் எங்கே எனக் குரல் எழுப்பி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றி விபரங்களை சேகரித்தால் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவருகின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் காணாமல் போயிருக் கிறார்கள். அவர்களது கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை.இதுகுறித்த விபரங்கள் வருமாறு:
1998 ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆண்டவரின் மகன் சிவராமன் கடத்தப்பட்டார். ஆனாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 
இதனையடுத்து, 2001 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்போதும் முன்னேற்றமில்லை. பிறகு 2004ல் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக கடத்திச் சென்று கொலை செய்யப் பட்டது. தந்தை ஆண்டி தேவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. விசாரணை முடிவதற்குள் அவர் உட்பட இருவர் மரணம் அடைந்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தென்னக ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்எம்யு சங்கத்திற்கு நீண்ட காலம் தலைவராக இருந்தவர் நமச்சிவாயம். அவர் 2001ஆம் ஆண்டு காணாமல் போனார். 9 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவருடைய மனைவி சுசீலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். தனது கணவர் ஹரித்துவாருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றை கட்டி வந்தார். அது தங்களுக்கு தான் சொந்தமானது என்று எஸ்ஆர்எம் சங்கத்தின் அடுத்த கட்ட தலைவர்க ளான ராஜா ஸ்ரீதரும் கண்ணையாவும் சொந்தம் கொண்டாடி வந்தனர்.இந்த நிலையில் எனது கணவர் காணாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். 18 ஆண்டு காலம் கடந்தும் அவர் என்ன ஆனார் என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. கண்டுபிடிக்கவும் இல்லை.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வர் அதிமுக எம்எல்ஏ பாலன். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவுக்கு மாறினார். கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபயிற்சி சென்ற அவர் காணாமல் போனார்.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது மகன் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவினை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காணாமல் போன பாலனை கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட்டது. விசாரணை நடத்திய போலீசார், முன்னாள் எம்எல்ஏ பாலன் கடத்தி கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை எருக்கஞ் சேரி சுடுகாட்டில் எரித்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மாணவிகள்
மறுபுறம், குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவிகள் கடத்தப்படுவதும் தமிழ் நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து விட்டது. குறிப்பாக குழந்தை கடத்தலில் தமிழகத்திற்கு முதலிடமாகும். தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ள அறிவிக்கையில் ஆண்டொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்ப டுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோருக்கு கடமை இருப்பதுபோல் குழந்தைகளை கடத்தும் சமூகவிரோதி களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்குவதும் அந்த சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாகும்.குழந்தைகளை கடத்தி உடல் உறுப்பை திருடி விற்பது, பாலியல் தொழில், பிச்சை எடுக்க வைப்பது போன்ற தொழிலில் சமூக விரோத கும்பல் ஈடுபடுத்தி வருகிறது. இப்படி 
காணாமல் போகும் குழந்தைகள் குறித்த தகவலை பதிவு செய்யும் காவல்துறை ஆள்கடத்தல் வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தியது இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

தினமும் 2 குழந்தைகள்
தமிழகத்தில் தினமும் இரண்டு குழந்தை கள் வீதம் பல்வேறு பகுதிகளும் காணாமல் போகிறார்கள் இதுகுறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. குழந்தை
கள் காணாமல் போகும் புகார்களை காவல்துறையினர் முறையாக பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதும் வேதனைக்குரியதாகும். இதுபோன்ற சம்பவம் 2004ல் 440 ஆக இருந்தது 2005இல் 650 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 115 ஆக இருந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசின் தலைமைச் செயலாளர் காவல்துறை தலைமை இயக்கு னர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டம் ரத்தினபுரியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த பாக்கியா செவ்வந்தி என்ற இளம் பெண் ஒருவர் காணாமல் போனார் நீண்ட நாட்க ளுக்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் முசிறி ஆம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் எலும்பு துண்டுகளாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஞ்சிதா என்கிற அந்த மாணவி மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி கல்லூரி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்கவில்லை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாணவி எலும்பு துண்டுகளாக மீட்கப்பட்டது சோகத்திலும் சோகம். இவரது பெற்றோர் கூலித் தொழிலாளியாவர். இந்த சம்பவத்தை காவல்துறை வழக்கம் போல் ஒரே வரியில் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டதாக வழக்கை முடித்து வைத்தது. 

இதேபோல் சென்னைக்கு மிக அரு காமையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி சரிதா மாயமானார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றவர் அன்றைய தினம் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மாணவியின் நண்பர்கள் என பல வீடுகளுக்குச் சென்று எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை.  சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு ஏரி ஓடை ஓரமாக இளம்பெண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல்துறை அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தியது. பின்னர் அந்த மாணவி புது எங்கடா புரத்தைச் சேர்ந்த காணாமல் போன சுப்பிரமணியனின் மகள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டு வீசி எறிந்தது தெரிய வந்தது. 

கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மற்றும் ஒக்கி புயலின் போதும் மாயமான மீனவ குடும்பங்கள் இன்றுவரைக்கும் கண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டு காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம் ஏராளம். இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த ஒரே கட்சி நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆளும் அதிமுக ஆட்சியின் அலங்கோலமாகும்.

===சி. ஸ்ரீராமுலு====
 

;