எதிர்க்கட்சிகள் அல்லது சமூக இயக்கங்கள் நடத்தும் எவ்வளவு பெரிய போராட்டங்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பது பிரதமர் மோடியின் வழக்கம்.
ஆனால்,மோடி அரசின் மூன்று விவசாய விரோத சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் மோடியை அசைத்துள்ளது.செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 முடிய உள்ளகாலத்தில் மோடி ஆறுமுறை விவசாயிகளின் போராட்டங்களைப் பற்றி பேசியுள்ளார்.கடந்த பத்தாண்டு காலத்தில், நாடு பார்க்காத மிகப்பெரிய போராட்டமாகும் விவசாயிகளின் தற்போதைய போராட்டம். விவசாயிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை கொரோனா அச்சம் ஒன்றும் செய்ய முடியவில்லை. செப்டம்பர் 25 இல் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்பு இயக்கத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகியமாநில விவசாயிகள் போர்க் கோலம் பூண்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் முழு வேலை நிறுத்தமே நடைபெற்றது.
பொய்களை விற்பனை செய்யும் மோடி அரசு
மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையில் 127 உறுப்பினர்கள் வேளாண் விரோத மசோதாக்களை எதிர்த்த போதும் சட்ட விரோதமாக அந்த மசோதாவை நிறைவேற்றிக் கொண்டது பாஜக அரசு.விவசாயிகளின் கொந்தளிப்பைக் கண்ட பின்னர் மோடி அரசு வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பு சட்டம் ஆகிய தேச விரோத சட்டங்களினால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று கூறி வருகிறது.
‘‘மூன்று சட்டங்களின் பலனாக வேளாண் துறையில்மூலதனம் குவியும்; விவசாய விளை பொருள்களை எங்குவேண்டுமானாலும் விவசாயிகள் விற்கலாம்; விவசாய சந்தையில் போட்டி உருவாகும்; எனவே விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்; இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகள் விடுதலை பெறுவார்கள்; இந்திய விவசாயிகள் 1947 ஆகஸ்ட் 15 இல் சுதந்திரம் பெறவில்லை; பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய 2020 செப்டம்பர் 24 இல் தான் சுதந்திரம் பெற்றனர்; விவசாய விளை பொருள்களுக்கு உத்தரவாதமான சந்தை ஏற்படும்; எதிர்க் கட்சிகள்தான் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர்..’’ என்றெல்லாம் பாஜக அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.தங்களுக்குள்ள மீடியாக்களின் பலத்தினால் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளது. ஆனால்,இந்திய விவசாயிகள் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் மோசமாக்கும் என்பதைநன்றாகவே அறிந்துள்ளனர். தாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று வலிமையான தங்கள் போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் விவசாயிகள்.
உண்மையில் என்ன நடக்கும்?
* பதுக்கல்களையும் கருப்புச்சந்தையையும் ஊக்குவிக்கும் சட்டம்
* வேளாண் ஒப்பந்தம் மூலமாக விவசாயிகளை அடிமையாக்கும் சட்டம்
* கார்ப்பரேட்டுகள் மூலம் வேளாண் வர்த்தகம் மேற்கொள்ளும் துரோகச் சட்டம்
- என்றுதான் மோடி அரசின் இம்மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கும் பெயரிட்டிருக்க வேண்டும்.புதியசட்டங்களில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய உத்தரவாதம் ஏதுமில்லை .
ஏதோ கொஞ்சம் பலன் அளித்த வேளாண் விளைபொருள்கள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்படும். கார்ப்பரேட்டுகளின் தங்குதடையற்ற மூலதனம் இந்திய வேளாண் துறையை ஆக்கிரமிக்கும்.விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் வீட்டு வேலைக் காரர்களாக்கும். 1960 இல் நிறைவேற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் காற்றில் பறக்கவிடப்படும். குறைந்த பட்ச ஆதார விலை, உணவுப் பொருட்களை அரசு கொள்முதல் செய்தல் மற்றும் சேமித்தல், பொது விநியோகம் ஆகிய எல்லாக் கடமைகளையும் அரசு கைவிட்டு விடும். விவசாயிகள் நுகர்வோர் இருவருமே வஞ்சிக்கப் படுவார்கள். கார்ப்பரேட்டுகள்- விவசாயிகள் வேளாண் ஒப்பந்தம் விவசாயிகளை கண்ணீர்க் கடலில் தள்ளிவிடும். நாட்டின் முழு வேளாண் சந்தையும் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்று விடும்.விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக பாஜகவினர் கூப்பாடு போடுகின்றனர். ஆனால் உண்மையில் விவசாயிகள் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்படுவதற்கான சுதந்திரம், விவசாயிகள் அடிமை ஆவதற்கான சுதந்திரம் மற்றும் தற்கொலை செய்வதற்கான சுதந்திரத்தைத்தான் மோடி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார்.இவர்கள் கூறும் ‘சுதந்திரம்’ பொய்யானது. அபாயகரமானது. கிரிமினல்தனமானது. ஏமாற்றுத்தனமானது. நாட்டின் வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் கடுமையான, நீண்ட கால பாதகத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஒப்பந்த சாகுபடி
ஒப்பந்த சாகுபடி முறை ஏற்கனவே பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு,கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஒப்பந்த விவசாயம் பரவலாக நடைபெறுகிறது. ஆனால், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, ஜம்மு -காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒப்பந்தசாகுபடி முறை இல்லை.ஒப்பந்த சாகுபடியானது வேளாண் விளை பொருட்களின் தரம், விலை,கொள்முதல் செய்யப்படும் காலம், விளைநிலத்தின் பரப்பு மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடம் ஆகிய ஐந்து விஷயங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். ஒரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனம், மறுபுறம் பரிதாபத்திற்குரிய விவசாயி என சமமற்ற தளத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. தர நிர்ணயம் வெளிப்படைத் தன்மையின்றி தன்னிச்சையாக கார்ப்பரேட்டுகளால் நிர்ணயிக்கப்படும். இதனால் விவசாயிகளின் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் நட்டாற்றில் விடப்படுவர். லாபத்திற்காக விவசாயிகள் சக்கையாக பிழியப்படுவார்கள்.1960களில் இருந்து பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஒப்பந்த விவசாயம் அதிக அளவில் நடக்கிறது. 1990கள் முதல் பெப்சிகோ நிறுவனம் உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவைகளை ஒப்பந்த பண்ணை சாகுபடி மூலம் கொள்முதல் செய்கிறது. இதுவரை ஒப்பந்த பண்ணை சாகுபடியில் உரிய காலத்தில் கொள்முதல் செய்யாதது, தாமதமான பணப்பட்டுவாடா, குறைவான விலை, விளைச்சல் பொய்த்துப் போனால் நஷ்ட ஈடு வழங்காதது, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற பல்வேறு சிரமங்களை ஒப்பந்த முறை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர்.
உதாரணமாக தமிழ்நாட்டில்வேளாண் சார் தொழிலானபிராய்லர் கோழி வளர்ப்புத் தொழிலில், சந்தையின் தேவையைப் பொறுத்தே பெருநிறுவனங்கள் உரிய காலத்திற்கு முன்போ அல்லது காலதாமதமாகவோ கொள்முதல் செய்கின்றன. இதனால் அதிக அளவில் முதலீடு செய்த கோழி வளர்ப்பு விவசாயிகள் இக்கட்டில் சிக்கிக் கொள்கின்றனர் .குஜராத்தில் பெப்சிகோ நிறுவனம், விவசாயிகள் தங்கள் தனிஉரிமை உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதிர்ச்சியளித்தது . கேரளாவில் அம்பிகா தேவி என்ற விவசாயி நந்தன் பயோமெட்ரிக் நிறுவனத்திற்கு சபெட் முஸ்லி எனும்மருத்துவ பயிரை உற்பத்தி செய்து தர ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், அந்த நிறுவனம் குறித்த காலத்தில் பணத்தை வழங்காததால் அம்பிகா தேவி கேரள மாநில நுகர்வோர் தாவா தீர்வாயத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றார் . ஆனால் நிறுவனமோ தங்களின் ஒப்பந்தத்தை நுகர்வோர் சட்டம் கட்டுப்படுத்தாது என்றது. அம்பிகா உயர்நீதிமன்றம் சென்றார். அங்கும் விவசாயிக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றார்.இதற்குள் 12 ஆண்டுகள் கடந்து விட்டது.
இப்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம் பாதிக்கப்படும் விவசாயிகள் சிவில் நீதிமன்றங்களுக்கு செல்வதைக்கூட தடைசெய்து, தீர்வுக்கான வழிகாண வகையில்லாத அதிகாரிகளிடம் தாவாக்களை கையாளும் அதிகாரத்தை அளித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒப்பந்த சாகுபடி விவசாயிகள் சூறையாடப்படுகின்றனர்.
விலை அதிகரிக்கும்
பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பணப்பயிர்கள் மீதுதான் நாட்டம் கொள்கின்றன. நெல், கோதுமை போன்றஉணவுப் பொருட்கள் கொள்முதலில் உள்ள அபாயம் பற்றி புதிய வேளாண் சட்டங்கள் கண்டுகொள்ளவில்லை.
புதிய சட்டத்தினால் இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும் உண்மை அல்ல. இந்தியா போன்ற பெரியநாட்டில் வேளாண் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஏராளமான இடைத் தரகர்கள் தேவை. நாட்டின்விளைநிலங்கள் 85 சதவிகிதம் சிறு குறு விவசாயிகளின்கையில்தான் உள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளிடம் தொடர்புகொள்ள விவசாய தொழில்நுட்பவியலாளர்கள் முதல் பல்வேறு நபர்கள் மிகப்பெரிய அளவில் பெரு நிறுவனங்களில் வேலை செய்வார்கள். இதனால் விவசாயிகள் முதல் நுகர்வோர் வரையிலான உணவு விநியோகச் சங்கிலியின் தூரம் அதிகரிக்கும். உலக அளவிலான ஒப்பந்த சாகுபடி முறை அனுபவங்கள் விவசாய விளைபொருட்களின் விலை அதிகரிப்பைத் தான் காட்டுகின்றன.
2010 களிலேயே ஏபிசிடி குரூப்,பங் (bunge), கார்கில்,ட்ரெய்பஸ் (dreyfus) ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கத்தில்தான் உலக தானிய வர்த்தகம் (75 % முதல் 90 %)இருந்தது. புதிய வேளாண் சட்டங்கள் மீண்டும் நாட்டை காலனித்துவ காலப்பஞ்சத்துக்கு கொண்டு செல்லும். ஒப்பந்த விவசாய சாகுபடி முறை பெண்களையும் குழந்தைகளையும் ஊதியம் வழங்கப்படாத தொழிலாளர்களாக மாற்றிவிடும். இது பல்வேறு சமூக தீமைகளை உருவாக்கும். அதீத ரசாயன இடுபொருட்களின் பயன்பாடு சூழலியல் நாசத்தை ஏற்படுத்திவிடும். இன்றியமையாத மேல்மண், வளத்தை இழந்து விடும். இது போன்ற நிகழ்வுகளில் வற்றிய குளத்தை விட்டுச் செல்லும் பறவைகள் போலகார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு பகுதிகளுக்கு படையெடுத்துச் சென்று விடும்.
குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்
விவசாய விளை பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதன் நோக்கம் விவசாயவிளை பொருட்களின் விற்பனை விலை மிகவும் கீழே இறங்கி விடாதவாறு விவசாயிகளை பாதுகாக்கவும், மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றி உணவுப் பாதுகாப்பு வழங்குவதுமாகும்.1960 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி காலத்திலிருந்து இந்த நடைமுறை இருக்கிறது.மத்திய அரசு ஒவ்வொரு விதைப்பு காலத்திற்கு முன்பும் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கும். மாநில அரசுகளும் மேற்கொண்டு ஊக்கத் தொகையை அறிவிக்கும். மத்திய அரசு, இந்திய உணவுப்பொருள் கழகத்தினை நிறுவி அதன் மூலம் கோதுமை, நெல் போன்ற உணவு தானியங்களை கிட்டங்கிகளில் சேமித்து பொது விநியோக திட்டத்தில் வழங்குவது, உணவு பாதுகாப்பில் குறிப்பிட்ட பலனை அளித்தது. உணவுப் பாதுகாப்புக்கு விவசாயிகள் நுகர்வோர் இருவருக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும்.ஒடிசா வறட்சிக் காலத்தின்போது, இந்திய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக எவ்வாறு மிகச் சரியான காலத்தில் மக்கள் பட்டினியில் இருந்து காப்பாற்றப் பட்டனர் என்பதை பேரா.அமர்த்தியாசென் குறிப்பிடுவார்.எனினும், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் உரிய முறையில் செயல்படவில்லை.ஐந்தாறு மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை அரசு மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதாரவிலையைக் காட்டிலும் குறைவாகவே விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வது நடைமுறையாகவே உள்ளது.அதுவும் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படுவதில்லை. பொதுவிநியோக முறை தமிழ்நாடு, கேரளா போன்று நாடு முழுவதும் ஒரே சீராக இல்லை.தாராளமயம் தொடங்கிய 1990 களில் இருந்து கொள்முதல், சேமிப்பு, பொது விநியோக திட்டத்தின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. விளைவாக பட்டினிக் குறியீட்டில் இதர தெற்காசிய நாடுகளை விட இந்தியா மிக மோசமான நிலையில் நிற்கிறது.
வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் குழு
ஒரு தனிப்பட்ட நபரை விட கூட்டு நிறுவனம் மூலம் வேளாண் சந்தையில் விலை நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் இக்குழுவில் இருந்தனர். இதன் மூலம் விவசாய சந்தைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இது 1939 இல் பஞ்சாபில் உருவான வழிமுறையாகும். தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளாக இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 7,000 ஒழுங்குமுறை விற்பனை குழுக்கள் உள்ளன. இதற்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைதான் மையமான ஆதாரமாகும்.குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம், வேளாண் விளை பொருள்கள் ஒழுங்குமுறை விற்பனை குழுக்கள் மற்றும் அரசு மூலம் கொள்முதல் இவை மூன்றும் முக்கியமான முக்கோண கொள்கையாகும். இருப்பினும் வேளாண்விளைபொருள்கள் ஒழுங்குமுறை விற்பனை குழுக்களில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன. சந்தையில் நிலவும் ஜனநாயகமற்ற சூழல், இக்குழுக்களில் உள்ள சுயநல அரசியல்வாதிகள் , வர்த்தகர்கள், இக்குழுவின் நோக்கத்தை சிதைத்து விட்டனர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் 2006 இன் படி அனைத்து வேளாண் பொருள்களுக்கும் உற்பத்திசெலவுக்கு மேல் ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலையில் வேளாண் விரோத சட்டங்கள் மூலம் குறைந்த பட்சஆதார விலை நிர்ணயம் என்பது முற்றிலுமாக கைவிடப்படும். வேளாண் ‘விரோத’ சட்டப்படி கார்ப்பரேட்டுகள், விவசாயிகளிடம் நேரடி ஒப்பந்தம் கொள்முதல் எனும்போது அரசே செய்யும் ஆதார விலை நிர்ணயம், கொள்முதல், சேமிப்பு, பொது விநியோகம் எனும் உணவு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மத்திய அரசு கை கழுவிவிடும். ஆனாலும் மோடி விவசாயிகளின் போராட்டங்களினால் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதைஅரசு தொடரும் என்கிறார். இப்போது நிறைவேற்றப்பட்ட வேளாண் விரோத சட்டத்தில் இல்லாததை சொல்கிறார்.
2019 பொதுத்தேர்தல் ‘ஜூம்லாக்கள்’ போல இதுவும் ஒரு ஜூம்லா என்பதில் சந்தேகம் இல்லை.வேளாண் விளை பொருள் ஒழுங்குமுறை விற்பனைக்குழு மூலமாக வேளாண் சந்தைகள் இயங்கி வந்தன. விளைபொருள்கள் ஒழுங்குமுறை விற்பனை குழுக்களில் இடைத்தரகர்களை ஒழித்தல் எனும் பொய்யான முழக்கத்துடன் மோடி புதிய வேளாண் விரோத சட்டங்கள் மூலம் வேளாண் ஒழுங்குமுறை குழுக்களையே அழித்தொழித்து விட்டார்.
சிறு, குறு விவசாயிகள்
வேளாண் விரோத சட்டங்களினால், இந்திய விவசாயத்தில் 85% விளைநிலங்களை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் அவர்கள் பேரபாயத்தில் இருக்கிறார்கள். கடன், விளை பொருட்கள் விலை இன்மை, பாசன வசதியின்மை, அதிகரித்துவரும் உற்பத்தி செலவினம், அனைத்து அரசு உதவிகளும் நின்றுபோனது, தொடர்ச்சியான வறட்சி- வெள்ளம்,பயிர் விளைச்சல் பொய்த்துப் போவது ஆகிய பல்வேறு பிரச்சனைகளால் அல்லலுறும் அவர்கள் வேளாண் விரோதச் சட்டங்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
===மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்கள் குறித்து 2020 அக்டோபர் 23 பிரண்ட் லைன் ஏடு விரிவான பார்வையை அளிக்கிறது. அதில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் சாராம்சத்தை தமிழில் தருகிறார் ம.கதிரேசன்===