tamilnadu

img

வெண் கொடியின் சிவப்பு நட்சத்திரம்

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள, விவசாய பூமி தான் திருநெல்வேலி தச்ச நல்லூர் அருகில் உள்ள கரையிருப்பு. அங்குள்ள ஆர்.எஸ்.ஏ நகரில் பிறந்தவர் தோழர் அசோக். பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பேட்டையில் உள்ள மதிதா இந்துக் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்தவர்.  கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போதே கல்வியை மட்டு மல்லாமல் சமூகத்தையும் கற்கத் துவங்கியுள்ளார். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொ டர்ச்சியாக சங்கத்தின் ஊழியனாக செயல்படத் துவங்கிய தோழர் அசோக், தன்னுடைய கிராமத்திலும் அமைப்பினை உருவாக்கியுள்ளார்.  அந்த கிளைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளார்.  

அர்ப்பணிப்பு மிக்க பணிகள்

அப்போது அந்த கிராம மக்களின் பெரும் பிரச்சனை யாக இருந்த குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான முன்முயற்சியை அசோக் தான் மேற்கொண்டார். எல்லா சமூகத்தினரும் வாழக்கூடிய பகுதியில் குடிதண்ணீர் பிரச்ச னைக்காக மாநகராட்சிக்கு சென்று மனு அளித்ததோடு மட்டு மல்லாமல் போராட்டத்தை முன் நின்று நடத்தியதும் அசோக் தான். அவரது முன்முயற்சியில் கட்டப்பட்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி இப்போதும் உயர்ந்து நிற்கிறது. எல்லா பகுதி மக்களுக்கும் பயன்படக்கூடிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அவர் வசிக்கக்கூடிய ஆர்.எஸ்.ஏ நகரில் அமைந்த போது பலர் பலவிதமான கருத்துக்களை முன் வைத்தனர். ஆனால் குடிநீருக்காக வரக்கூடிய தொட்டியை நம் பகுதியில் கட்டுவது நல்ல விஷயம் என்று எடுத்துச் சொல்லி அதை கட்டுவதற்கான பணிகளை ஆதரித்து செயல் பட்டுள்ளார்.

இளைஞர்களை ஈர்த்த அசோக்

இளமையும் விளையாட்டும் இணைபிரியாதது.  அது மட்டுமல்ல, இளைஞர்களிடையே ஒழுக்கத்தையும், நற் குணங்களையும் வளர்த்தெடுக்கும் சக்தி விளையாட்டிற்கு உண்டு. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் கிரிக்கெட் போட்டியை நடத்தி இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேலும் வளர்த்தெடுத்தார்.   அசோக்கிற்கு இயற்கையாகவே அமைந்திருந்த மக்கள் நல ஆர்வமும், அமைப்பின் மீதான ஈடுபாடும் அவரு டைய செயல்பாட்டிற்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளன. அதனால் வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளராக தேர்வு செய்யப்பட்டு துடிப்போடு செயல்படத் துவங்கினார். வாலிபர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களை நெல்லை மண்ணில் தலைமை தாங்கி நடத்தினார். 

சங்கத்தின் முன் மாதிரி

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டபோது நெல்லை யில் எதிர்ப்புப் போராட்டத்தை வலுவாக நடத்தினார். 7 தமிழர் விடுதலைக்காக தபால் அனுப்பும் போராட்டத்தை நடத்தி யதும், நீட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததும், எங்கே எனது வேலை என்ற முழக்கத்துடன் இளைஞர்களுடைய வேலைவாய்ப்புக்கான போராட்டங்களிலும் நாயகனாக அசோக் திகழ்ந்தார். எந்தப் போராட்டமாக இருந்தாலும் தோழர்களை அணிதிரட்டுவதிலும், இளைஞர்கள் மத்தி யில் போராட்ட உணர்வினை வளர்த்தெடுப்பதிலும் நமக்கு அசோக்கே  முன் மாதிரியாவார். அதேபோல, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார். மறுபக்கம் கோவில் திருவிழாவின்போது தண்ணீர் பந்தல் அமைத்து தாகம் தீர்ப்பது, ஒக்கி புயலால் மக்கள் பாதிக் கப்பட்ட போது வீடு வீடாக சென்று நிதி திரட்டி அனுப்பி வைத்தது என்று பன்முகத் தன்மையோடு வாலிபர் சங்க பணிகளையும் இடதுசாரி இயக்கப் பணிகளையும் தோழர் அசோக் முன்னெ டுத்துச் சென்றுள்ளார்.  சாதி வெறியர்களால் அவர் வெட்டி  படு கொலை செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட,  மூன்றாம் முறையாக ரத்த தானம் செய்துள்ளார். 

சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் மாற்றான மனிதநேயமே நாங்கள்  “தோழர்”
ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு எங்கெல்லாம் கேட் கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று சொன்ன சேகுவேராவின் உருவம் பொறித்த டி.சர்ட்டை அணிந்து கொண்டு, நெல்லை மாநகரம் முழுவதும் மக்கள் நலனுக்காக களப்பணியாற்றிய அசோக், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கூட, ‘சாதியத்திற்கும் மதவாதத்திற் கும் மாற்றான மனிதநேயமே நாங்கள்  ”தோழர்” என்று பொறித்துக்கொண்டு வலம் வந்தவர்.

பணியை மாற்றி இயக்கத்திற்கு நேரம்

நெல்லை மாநகரத்தில் ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் புதிய கிளைகளை அசோக் உருவாக்கினார். கரிசல் குளம் மற்றும் சுத்தமல்லி நகரின் ஒரு பகுதியில் வாலிபர் சங்கத்தினுடைய வெண் கொடிகள் பறக்கத் துவங்கின. தன் னுடைய வேலை நேரம் போக இயக்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அசோக், தேவைப்படும்போ தெல்லாம் இயக்கப் பணிக்காக விடுப்பெடுத்து பணி யாற்றத் தொடங்கினார். தான் செய்து வரும் வேலை இயக்க பணிக்கு சில நேரங்களில் தடையாக இருந்தது என்று கருதியபோது, தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு டயர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் அமைப்பின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கூடுதல் நேரம் அவருக்கு கிடைத்தது. தன்னுடைய வேலை யை அமைப்பிற்காக மாற்றியமைத்த அந்த உறுதியும், செயல்பாடும் அமைப்பின் மீதான அவருடைய தீராத பற்றினை வெளிப்படுத்துகிறது. டயர் கம்பெனிக்கு இரவுப் பணிக்கு சென்று வந்தவுடன், மற்ற அனைத்து நேரங்களிலும், சங்க பணிக்காகவும் ஜனநாயக இயக்கங்களின் வேலைக ளுக்காகவும் இடையறாது செயல்பட்டு வந்தார்.

ஜனநாயகம் ஏற்படுத்திய கிலி

க உருவாவதற்கு வித்திட்டது. ஜனநாயக அமைப்பின் செயல்பாடு புதிய தளத்தை அந்த வட்டாரத்தில் ஏற்படுத்தி யது. மக்கள் நலனுக்காக துடிப்போடு செயல்படக்கூடிய இயக்கமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் செங்கொடி இயக்கமும் அப்பகுதியில் வளர்ந்தது. புதிய இளை ஞர்கள் இயக்கத்தின் பின்னால் அணிவகுத்தனர். அசோக்கி னுடைய வளர்ச்சி ஜனநாயக இயக்கத்தை அடுத்த கட்ட உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்நிலையில்தான், வட்டித் தொழில் செய்து பிழைப்பு நடத்திவந்த ஆதிக்க சக்திக ளுக்கும், சாதி வெறி பிடித்த கூட்டத்திற்கும் இந்த ஜனநாயக வளர்ச்சி அச்சத்தினை ஏற்படுத்தியது.  இயக்கத்தின் மீதான அவதூறுகளை தன்னுடைய கருத்து எனும் ஆயுதத்தால் எளிதாகக் கடந்து வந்தவன் அவன். உங்கள் தலைமையில் எத்தனை பேர் தலித் என்று கேட்டபோது நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று உரக்கக் கூறிய வன் நம் தோழன். பல்வேறு இயக்கங்கள் திருநெல்வேலி யில் செயல்பட்ட போதும் அசோக் தேர்வு செய்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தையும், இடதுசாரி இயக்கத்தை யும்தான். களத்திலும், கருத்திலும் சமூகத்திற்கு உண்மை யான மாற்று இடதுசாரி இயக்கமும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கமும் தான் என்று உறுதியாக அவன் அறிந்திருந்தான். அதனால்தான் அந்தப் பாதையில் அவன் பயணித்தான். களப் போராளியாக, சேவை உள்ளம் கொண்டவனாக, வாசிப்பாளனாக என பன்முகத்தன்மை கொண்ட சிறந்த ஊழியனாக திகழ்ந்த தோழர் அசோக்கின் படுகொலையால் ஜனநாயக இயக்கத்தின் குரல்வளையை நெரித்து விடலாம் எனக் கருதி, அரிவாளை கொண்டு கொடூரமான முறையில் கோழைத்தனமான செயலை செய்துள்ளனர். ஆனால், அசோக்கின் தத்துவ வலிமை, கொள்கை உறுதி குறித்து அவர்கள் அறியவில்லை.

அசோக் சொல்லப்பட்ட இடத்தில் ஆயிரம் ஆயிரம் மக்கள் அணி திரண்டனர். இக்கொலையோடு சாதி ஆதிக்கத் திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கண்டனம் முழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழகம் முழுவதும் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தது. தமிழ கம் முழுவதும் இருந்து தோழர்கள் விரைந்து வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தார். அதுவரை மக்களை ஏமாற்ற முயற்சி செய்த அரசும், காவல் துறையும் தோல்வியடைந்தது. போராட்ட வீரர்களின் கோரிக்கையை கேட்கத் துவங்கியது. மாநகர போலீஸ் கமிஷனர் துவங்கி அதிகாரி கள் வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தனர். போராட்டங்களின் முன்னால் அதிகாரவர்க்கம் மண்டியிடும் என்ற வரலாற்றினை மீண்டும் படைத்தது நெல்லை மாநகரம்.  ஆயிரக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனையில் காத்திருந்தன. அசோக்கின் உடலை பெற்றுக் கொண்டு, வெண்கொடியும் செங்கொடியும் போர்த்தப்பட்டு, வீரவணக்கம் செலுத்தி, இறுதி ஊர்வலம் துவங்கியது. இது வரை இல்லாத முறை யில், புரட்சியாளனை சுமந்த வாகனம் பத்து கிலோ மீட்டரை கடப்பதற்கு 3 மணி நேரம் ஆனது. ஊரை அடைந்தவுடன் பல ஆயிரக்கணக்கான மக்கள் தன்னுடைய தலைவனை இழந்த சோகத்தோடு சுடுகாட்டில் குவிந்தனர். இதுவரை ஆண்கள் மட்டுமே சென்று பழகிய சுடுகாட்டில் வழக்கத்தை மாற்றி, ஆணும் பெண்ணுமாக தோழர் அசோக்கிற்கு வீர வணக்க அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

வீரவணக்க நிகழ்வுகள்
 

தோழர் அசோக்கை சாதிய ஆதிக்கவெறி பிடித்த கூட்டம் வெட்டி படுகொலை செய்திருக்கலாம். அவன் சிந்திய ரத்தம் வெண்கொடி சிவப்பு நட்சத்திரத்தில் பட்டு மேலும் சிவப்பாக்கி யுள்ளது. அவன் சிந்திய ரத்தம் நம்மை உரம் ஏற்றுகிறது. அவன் செய்த தியாகம் நம்முடைய போராட்டத்தை வீறு கொண்டு எழச் செய்கிறது. போராட்டங்களின் விளை பயனாய் ஆயிரமாயிரம் அசோக்குகள் இம்மண்ணில் உருவாவார்கள். ஆதிக்கத்தை, சுரண்டலை, சாதிய வெறியை முறியடித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இதையெல்லாம் மனதில் கொண்டு தான் எதிர் வரும் காலத்தில் தோழர் அசோக் தியாகத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளது.  

ஜுலை 1 முதல் 5 வரை தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் தோழர் அசோக் தியாகத்தைப் போற்றுவோம், அவர் சிந்திய ரத்தத்தில் உறுதி ஏற்போம் என்ற முழக்கத்தோடு வீரவணக்க       உறுதி ஏற்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

ஜுலை 10 அன்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்கும் எழுச்சிமிகு நிகழ்வினை நெல்லையில் நடத்துகிறது.

ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை தமிழகம் முழுவதும் 25,000 இளைஞர்கள் அசோக்கின் பெயரால் இரத்த தானம் செய்கிறார்கள். 

கட்டுரையாளர்: வாலிபர் சங்க மாநிலச் செயலாளர்
 


 


 

;