tamilnadu

img

எதிர்கால தலைமுறையினருக்காக இடது ஜனநாயக முன்னணி அரசின் மிகப்பெரும் பரிசு

கேரள மாநில அரசின் ‘நவகேரள மிஷன்’ திட்டத்தின் பகுதியாக நடைமுறைப்படுத்திய பொதுக்கல்விப் பாதுகாப்பு உறுதியேற்பு வெற்றிகரமாகத் தொடர்கிறது.

மக்கள்நலக் கல்வியின் சிறந்த முன்மாதிரியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. கட்சிஅரசியலுக்கு அப்பால் கேரள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, மக்கள்நலக் கல்வியை மனதில் ஏற்றி வரவேற்றிருக்கிறார்கள். முழுமையான எழுத்தறிவு உறுதியேற்பின் நினைவுகளும் ஆற்றலும் பொதுக்கல்வியை கூடுதலாக செழுமைப்படுத்தியுள்ளது. மூன்று முக்கிய அம்சங்கள் இந்தத் திட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. ஒன்று மக்கள் நலன், இரண்டு நவீனம், மூன்று மனிதநேயம். இந்த மூன்று கருத்துக்களும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிற விரிவாக்கமே பொதுக்கல்விப் பாதுகாப்பு உறுதியேற்பின் முன்னேற்றம்.  கல்வி வர்த்தகத்தால் விலை பேசப்பட்டுவிட்ட எல்லா மாண்புகளையும் மீட்டெடுப்பது என்பதே நமது இலட்சியம். அதன் மூலமாக ஜனநாயக, மதச்சார்பற்றக் கல்வி என்கிற ஐக்கியக் கேரளத்தின் நீண்டகாலக் கனவை நனவாக்கிட நம்மால் முடியுமென்று நம்புகிறோம். எதிர்காலத் தலைமுறையினருக்காக நாம் இருப்பில் வைக்கிற மிகப்பெரும் பரிசாக அது இருக்கும்.

கல்வியில் சமத்துவம்

கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின் கடந்த மூன்றரை ஆண்டுக்கால கடும் முயற்சி மூலம் மேற்சொன்ன வழிகாட்டுதலால் மிகவும் முன்னோக்கிச் செல்ல நம்மால் முடிந்தது. நிதி ஆயோக்கின் கணக்கெடுப்பில் 82. 17 புள்ளிகளைப் பெற்று கேரளம் முதலாவது இடத்தைப் பிடித்தது இதற்கு ஓர் உதாரணமாகும். ‘வகுப்பறையுடன் இணைந்துள்ள சமூகம்’ என்ற கருத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவதையே மக்கள்நலக் கல்வி குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதேசமயம், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மிக நவீனக் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் கல்வித்துறையில் சமத்துவம் என்கிற கருத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

தனிமைப்படுத்தல் இல்லாததும், மனிதநேயமிக்கதும், இயற்கைப் பாதுகாப்பும், மதச்சார்பின்மையும், சமூகஉணர்வும், அறிவியல் சிந்தனையும் கொண்டதுமாக பிஞ்சுக் குழந்தைகளின் மனம் வளர்ச்சிப்பெற வேண்டும் என்பதுதான் பொதுக்கல்விப் பாதுகாப்பு உறுதியேற்பின் இலட்சியம். வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டதும், நவீனமயப்படுத்தலும் கொண்ட கல்வியின் மூலமாக மட்டுமே இந்தச் சாதனையைப் பெறமுடியும். இவ்விதமாக மட்டுமே நிலப்பிரபுத்துவ காலனி ஆட்சிக் காலத்தியக் கல்வியிலிருந்து நாம் விடுதலைபெற முடியும். தற்காலத்திய வர்த்தக-மதவாதக் கல்வி முறையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் இது ஒன்றே சிறந்த வழி. 

வகுப்பறை என்பது...

வகுப்பறைக் கல்வியிலிருந்து ஒதுங்காமல் இயற்கையின் பல்வேறு தளங்களுக்கும் வியாபித்துச் செல்கிற படைப்பாக்கச் செயல்தான் கல்வி. அப்போதுதான் மனிதனை மனிதனாக மாற்றுகிற செயல்முறையாகக் கல்வி மாறுகிறது. கல்விநிலைய வளாகத்தை ஒரு பாடப் புத்தகமாக  மாற்றுவது இத்தகைய முறையின் ஒரு துவக்கமாகும். டிஜிட்டல் வகுப்புகள் அதன் உபகரணமாகும். வகுப்புகளை உலகத்தின் முழு கோணங்களிலும் திறந்து வைத்துக் கொண்டு அறிவின் முழு ஆற்றலையும் தயார்படுத்தி குழந்தைகள் மனதின் சாத்தியங்களை ஓர் எல்லைவரை உயர்த்துவதற்கு டிஜிட்டல் வகுப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்த ஆசிரியர்களால் இயலும். அத்துடன், வகுப்பறை ஒரு நூலகம் என்கிற கருத்தை நடைமுறைப்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் வேண்டும். எல்லையற்ற வாசிப்பின் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாசிப்பை ஒவ்வொரு குழந்தையின் கலாச்சாரமாக மாற்ற வேண்டும். பொதுக் கல்விநிலையங்களின் படைப்பாக்கத் திறனுள்ள ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை அதிகபட்சம் பயன்படுத்தி வருகின்றனர். தாய்-தந்தையரும் இதே முறையிலான அறிவியலின் பயன்பாட்டாளர்களாக இருந்துவருகின்றனர். அதேசமயம், நாம் இதில் மேலும் கூடுதலாக முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. 

நாட்டிற்கே முன்மாதிரி

மாநில அரசு, கல்வித்துறை, மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள், பொதுமக்கள் ஆகியோரின் கூட்டுமுயற்சி மூலம் மேற்கூறப்பட்ட வழியில் முன்னோக்கிச் சென்றதன் விளைவாகத்தான் கேரளம் மீண்டும் தேசத்தின் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான ஏழை-எளிய குழந்தைகளுக்கான ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்குவதற்காகக் கேரள மக்கள் அயராது முயற்சிக்கிறார்கள் என்பதில் வரலாற்று முக்கியத்துவம் உண்டு. தீர்க்கப்பட வேண்டிய சில குறைபாடுகள் இப்போதும் உள்ளன. அவற்றையெல்லாம் சரிசெய்துகொண்டு முழுநிலைக்கு நாம் முன்னேற வேண்டும்.

ஆளுமைகளுடன் கல்வி நிலையம்

இந்த முன்னேற்றத்தின் பாதையில் ஒரு புதிய திட்டத்தை கேரளக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. ‘கல்வி நிலையம் தனித்திறன் பெற்ற ஆளுமைகளுடன்’ என்பதுதான் இந்தத் திட்டம். ஒவ்வொரு கல்வி நிலையத்தின் அருகில் வசிக்கிற படைப்புத் திறனுள்ள தனித்திறனாளர்களை அவர்களின் வீட்டுக்குச் சென்று பாராட்டவும், புதிய தலைமுறையினர்க்கு அவர்கள் வழங்க வேண்டிய செய்தியைப் பெறவும் இந்தத் திட்டம் பயன்படுகிறது. குழந்தைகள் தினமாகிய நவம்பர் 14 முதல் 28 வரை ஏதாவது ஒரு நாளில் 15 மாணவர்கள் ஆசிரியர்களுடன் கல்வி நிலையங்களில் உள்ள  பல்லுயிர்ப் பூங்காவுக்கு மலர்களுடன் சென்று அவர்களைப் பாராட்டுவார்கள். தனித்திறன் பெற்ற ஆளுமைகள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லுவார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் முதலான ஆளுமைகளைச் சந்திப்பதே இதன் நோக்கம். இவர்களிடமிருந்து குழந்தைகளுக்குக் கிடைத்த செய்தியை அவர்கள் பள்ளிக்கு வந்து மற்ற குழந்தைகளுக்குச் சொல்லிப் பகிர்வார்கள். ஆளுமைகள், தனித்திறன் பெற்ற புதிய ஆளுமைகளை உருவாக்குவதே இதன் முக்கிய இலட்சியம். மாண்புகளைப் பகிர்ந்தளிப்பது என்பதும் இந்தத் திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது. அனுபவங்கள்தான் மிகப்பெரும் அறிவுச் செல்வம். அதை வரும் தலைமுறையினர்க்கும் பகிர்வதே மக்கள்நலக் கல்வியின் பிரகாசமான ஒளி. அறிவு ஒளியின் கோபுரமாக ஆவதற்கு, இளைய தலைமுறையினரைப்  படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்குவதற்கு இந்த மக்கள்நலக் கல்வித் திட்டத்தால் இயலும். கேரளத்தின் 14000 கல்வி நிலையங்கள் இரண்டு வாரங்களுக்குள் ஆயிரக்கணக்கான தனித்திறன் ஆளுமைகளைப் பெறும். இந்தத் திட்டத்தின் மூலமாக சமூகக் கல்விக்கு மற்றுமொரு முன்மாதிரியை கேரளம் உருவாக்குகிறது.   

கேரளத்தின் முற்போக்காளர்களாகிய மகத்தான ஆளுமைகளின் செய்திகளும் அறிவுரைகளும் பள்ளிகளில் பதிவுசெய்யப்படும். நல்ல செய்திகளைத் திரட்டி அவற்றை மாநில அளவில் ஒரு புத்தகம் ஆக்கவும் பொதுக்கல்வித்துறை விரும்புகிறது. படைப்பாற்றல் உள்ள அனைத்து ஆளுமைகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகிறேன்.

தமிழில் : தி.வரதராசன்



 

;