பெருந்தொற்றுப் பேரிடர்கள் ஏதோவொரு பேரருளின் பெருங்கோபத்தால் ஏற்படுவதில்லை, எங்கோவொரு சோதனைக்கூடத்தின் சூழ்ச்சியால் உற்பத்தியாவதுமில்லை. கல்தோன்றி மண்தோன்றியிருந்த காலத்தில் முன் தோன்றிய மூத்த நுண்ணுயிரியின் பரிணாமப் போராட்டத்தின் தொடர்ச்சியே புதுப்புது கிருமிகளின் வருகைகள். இந்த வருகைகள் நிகழ்வது தற்காலத்தில் தான் என்பதல்ல. கிருமிகளால் நோய் ஏற்படுவதை மனிதர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது. காரணம் அறியாமலே தெய்வக்குற்றம், தீயசக்தியின் கொற்றம் என்றெல்லாம் நினைத்து மக்கள் மருகி மடிந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
உருப்பெருக்கி உருவாக்கப்பட்ட பிறகுதான் அந்த நுண்ணுயிரிகள் உருவமுள்ள பிறப்புகள்தான் என்று தெரியவந்தது. தாங்கள் வாழவும் பெருகவும் ஏற்ற சூழல்களைத் தேடுகிற கோடிக்கணக்கான ஆண்டுப் பயணத்தில் விலங்குகளின் உடல்களைக் கண்டுபிடித்துப் புகுந்துகொள்கின்றன – மனித உடல்கள் உட்பட - என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்குத் தொண்டு செய்பவை நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் என்றும், உடலுக்குள் குண்டு போடுபவை தீமை செய்யும் கிருமிகள் என்றும் அறிவியல் உலகம் எடுத்துச் சொன்னது.
கிருமிகளின் தீவிரத்துக்குக் காரணம்
மனிதர்களைக் கொடூரமாகத் தாக்குகிற நோய்க்கிருமிகளின் வாழ்விடப் போராட்டம் அண்மைக் காலத்தில் தீவிரமாகியிருக்கிறது. அதற்குக் காரணம் மனித சமுதாயத்தின் பிற்காலத்திய வளர்ச்சிக் கட்டம்தான். அந்த வளர்ச்சிக் கட்டத்திற்கு முதலாளித்துவம் என்று பெயர்.
வரம்பில்லாத முதலாளித்துவச் சுரண்டல் வேட்கையால் இயற்கைச் சமநிலையில் ஏற்பட்ட சீர்குலைவுகள் அந்தக் கிருமிகளுக்கு நெருக்கடியைத் தருகின்றன, வேறு புதிய வாழ்விடங்களைத் தேட வைக்கின்றன. உல்லாச விடுதிகளுக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் வழிபாட்டு மையங்களுக்காகவும் பெரிய அளவில் காடுகள் ஆக்கிரமிக்கப்படுகிறபோது புலிகளும் யானைகளும் இடம் தேடி ஊருக்குள் வருகின்றன அல்லவா? அதே போலத்தான். மனித உடல்களைக் கிருமிகள் பற்றிக்கொள்வதும், அது நோய்களாகப் பலருக்குத் தொற்றிக்கொள்வதும் தீவிரமடைகிறது.
நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய காலத்தில் எப்படிச் சமாளித்தார்கள் என்று தெரியவில்லை. மன்னர்கள் குடிமக்களோடு வேறு பகுதிகளுக்குத் தப்பியோட முயன்றது, நாடுபிடிக்கும் போர்களால் சில இடங்களில் குவிந்து வாழும் நிலைமை ஏற்பட்ட மக்களிடையே தொற்றுகள் பரவியது போன்ற சில வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் உலகெங்கும் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு பெருந்தொற்றுப் பேரிடரையும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தி வந்திருக்கிறது. முதலாளிகள் தங்களுடைய தொழிற்சாலைகளில் தொற்றுக் கிருமிகளைச் செய்து பரப்பவில்லை, ஆனால் பரவிய தொற்றுச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
அந்தத் தனித் திறமை!
பெருந்தொற்றுப் பாதிப்பு நிலைமைகளைப் பெருமுதலாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது, இத்தகைய நேரங்களில் மக்களுக்குக் கட்டாயமாகத் தேவைப்படுகிற பொருள்களை ஏராளமாகத் தயாரித்து, சந்தைக்குக் கொண்டுவந்து, நியாயமான சதவீதத்தில் லாபம் வைத்து விற்பனை செய்கிற வணிகநெறிகளால் அல்ல. அதாவது தங்களது தொழில் திறமையால் அல்ல, வேறொரு திறமையால்! அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தித் தங்களுக்குக் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வைக்கிற திறமையால்! பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு, பாதுகாப்பு, சிகிச்சை, மீட்சி நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவது நிதி. அது குவிந்து கிடப்பது இந்தப் பெருமுதலாளி நிறுவனங்களிடம். அவர்கள் வைத்திருக்கிற பணத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டாம், ஆனால் அவர்கள் நிலுவையில் வைத்திருக்கிற வரிப் பணத்தைக் கைப்பற்றலாமே? அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிற வங்கிக் கடன்களைக் கைப்பற்றலாமே? ஆனால், கைப்பற்றுவதற்கு மாறாக இவையெல்லாம் கைகழுவப்படும். தள்ளுபடி செய்யப்படும். அது தள்ளுபடி அல்ல தள்ளிவைப்புதான் என்று விளக்கம் அளிக்கப்படும்.
“தற்போதைய கொரோனா காலத்தில் பெருநிறுவனங்களுக்கு இவ்வாறு வரி பாக்கிகளும் கடன் நிலுவைகளும் தள்ளுபடி செய்யப்பட்டது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.” –இது சில நாட்களுக்கு முன் வந்த செய்தி. இந்தியாவில் 68,000 கோடி “ரைட் ஆஃப்” செய்யப்பட்டது பற்றிய செய்திதானே என்று எண்ணிவிட வேண்டாம் – இது அமெரிக்காவிலிருந்து வந்த செய்தி. ஆம், கொரோனாவைக் கொல்ல மனித உடலில் கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தலாமா என ஆராயலாமே என்ற அரிய ஆலோசனையைச் சொல்லி அறிவியலாளர்களை மிரளவைத்த அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த நடவடிக்கைதான் இது. உலகப் பங்குச்சந்தை மையமான வால்ஸ்ட்ரீட் கம்பெனிகளையும், விமான நிறுவனங்களையும் இப்படி மகிழ வைத்தவர், அவர்களுக்கு மேலும் கடன் வழங்க உதவியாகச் சிறிய வங்கிகளுக்கு மைய வங்கிகள் நிதி ஒதுக்கீடு செய்யவும் ஆணையிட்டார். கூட்டுக்களவு முதலாளித்துவத்துக்கு எவ்வளவு சரியான எடுத்துக்காட்டு!
இதே போன்ற பெரும் சலுகைகள் சிறிய நிறுவனங்களுக்கும் நடுத்தர நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவதில்லை. சந்தைக் களத்தில் ஓடிவர முடியாமல் அத்தகைய நிறுவனங்கள் பின்தங்கிப்போவது கூட பெருமுதலாளித்துவ ஆதிக்கத்திற்கு வழி செய்வதே.
புதிரவிழும் ரகசியம்
சரக்குப் போக்குவரத்தோ, நுகர்பொருள்கள் விற்பனையோ இல்லாமலே பங்குச்சந்தைக் குறியீட்டெண் உயர்கிறது அல்லது சரிவடையாமல் இருக்கிறது. அதன் ரகசியம் என்ன என்ற வினாவுக்கு இப்போது விடை கிடைத்திருக்கும். தேர்தல் காலங்களில், யாருடைய ஆட்சி வரப்போகிறது என்பதைப் பொறுத்து பங்குச்சந்தைக் குறியீட்டெண் மேலே எகிறும் அல்லது கீழே விழும். அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவது யார் என்பதன் குறியீடு இது என்று சொல்லலாம்தானே?
பெருந்தொற்றுப் பேரிடரால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை சமாளிக்க இதுவே வழி என்று ஆட்சியாளர்களும், இந்த நடவடிக்கைகளை வரவேற்கும் பொருளாதார நிபுணர்களும் வாதிடுகிறார்கள். நெருக்கடியிலிருந்து பெருநிறுவனங்களைக் காப்பாற்றுவதால், அவற்றைச் சார்ந்திருக்கிற தொழிலாளர்கள் காப்பாற்றப்படுகிறார்கள், அவற்றைச் சார்ந்திருக்கிற சிறிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்றொரு வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.
இந்த வாதங்களின் பம்மாத்துத்தனத்தை உரித்துக்காட்டுகிறார் அமெரிக்க எழுத்தாளரும் பொருளாதார ஆய்வாளருமான ராப் யூரீ. அவர் ‘கவுன்ட்டர்பஞ்ச்’ இணையப்பதிப்பில் எழுதியுள்ள “கிருமியும் முதலாளித்துவமும்” (வைரஸ் அன்டு கேப்பிடலிசம்) என்ற கட்டுரையில், “பெருந்தொற்றுகள் நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அவற்றின் கிரியா ஊக்கிகளாக இருக்கின்றன,” என்று குறிப்பிடுகிறார். கார்ப்பரேட்டுகளை நெருக்கடியிலிருந்து விடுவிப்பதன் மூலம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்ற வாதத்தை விசாரணைக்கு உட்படுத்தும் அவர், “அப்படியானால் உங்கள் உதவிகளை நேரடியாகத் தொழிலாளர்களுக்கே வழங்கலாமே,” என்று கேட்கிறார். இந்தியாவில் வங்கி ஊழியர் சங்கங்களின் தலைவர்களும் மக்கள் சார் பொருளாதார அறிஞர்களும் கேட்கிற கேள்விதான். நெருக்கடிக்குத் தீர்வாக இப்படிப்பட்ட “பெயில்அவுட்” நடவடிக்கைகளை எடுக்கிற எந்தவொரு நாட்டில் மொழிபெயர்த்தாலும் இந்தக் கேள்வி பொருந்தும்.
பேரரசர்களின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு சிறு கும்பல்கள் (நேரடியாக ஆட்சியில் அமராமலே, அதாவது மக்களுக்குப் பொறுப்பேற்காமலே) அதிகாரம் செலுத்துகின்றன. சாதாரணமான காலங்களில் அந்தக் கும்பல் மற்ற நாடுகளை அழிக்க நினைப்பதில்லை. ஆனால் திடீர் நிலைமைகளை எதிர்கொள்வதற்குத் தயாராக அரசுகளை வைத்திருக்கின்றன என்று கூறும் ராப் யூரி, அதற்கொரு சாட்சியமாக, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கான செலவுகள், மக்களுக்கான சுகாதாரச் செலவுகளை விட அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அமெரிக்காவில் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு முற்றிலும் தனியார்துறையே என்பதை நினைவில் கொள்க.
உருவிக்கொண்டு ஓடும் நிதி
உலகப் பெருமுதலாளித்துவம் தனது சுயநலனுக்காக மற்ற நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு ராணுவ நடவடிக்கையை விட, நிதிச் சந்தையைத் தடம்புரளச் செய்கிற உத்தியைப் பெரிதும் கையாளும். தற்போதைய கொரோனா நெருக்கடிக் கட்டத்தில், மூன்றாம் உலக நாடுகளின் நிதிச் சந்தையிலிருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை உருவிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடுகின்றன. இதனை இந்தியாவின் பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் தமது “மூன்றாம் உலக நாடுகளிலிருந்து நிதி வெளியேற்றம்” என்ற கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார்.
மூன்றாம் உலக நாடுகள் பன்னாட்டு நிதியத்தை (ஐஎம்எப்) நாடுகிறபோது, அதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகிற அமெரிக்க அரசு தலையிடுகிறது. எந்த நாட்டிற்குக் கடனுதவி வழங்கலாம், யாருக்கு வழங்கக் கூடாது என்று ஐஎம்எப் நிர்வாகத்தைக் கெடுபிடி செய்கிறது. வெனிசுலா உள்ளிட்ட, அமெரிக்கப் பெருமுதலாளிகளின் பெருங்கோபத்திற்கு உள்ளான நாடுகளுக்கு அவ்வாறு நிதியுதவி மறுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பிரபாத். இப்போது மட்டுமல்ல, இதற்கு முந்தைய உலக அளவில் பெருந்தொற்றுப் பேரிடர்கள் தாக்கிய காலங்களிலும் பெருமுதலாளித்துவம் இந்த வழிகளில்தான் தப்பித்து வந்திருக்கிறது. மேலும் மேலும் பெருத்து வந்திருக்கிறது. முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் இவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்குக் கைகொடுக்கக் கூச்சப்பட்டதில்லை. இதையெல்லாம் பார்க்கிறபோது, பெருமுதலாளிகள் ஏற்கெனவே குவித்திருந்த செல்வம் நேர்மையான வழிகளில் வந்ததுதானா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.