tamilnadu

img

பெண் விடுதலைக்காக போரிட்ட சாவித்ரிபூலே - ஆர்.கோமதி

‘பள்ளிக்கு செல்லும் போது நம்மை எதிர்ப்பவர்கள் என்மீது சேறையும் மலத்தையும் வாரி அடிக்கிறார் கள் துணிகள் எல்லாம் அழுக்காகி விடுகின்றன பாழ்பட்ட துணிகளோடு குழந்தைகள் முன் சென்று நின்று சங்கடமாக உள்ளது. நான் என்ன செய்வது ? என்று தன் கணவர் ஜோதிராவ் பூலேவிற்கு கடிதம் எழுதுகிறார், நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரிபாய் பூலே. இப்பிரச்சனைக்கு ஜோதிராவ் பூலே ஒரு பதிலை அனுப்புகிறார். அதன் படி தினமும் பள்ளிக்கு செல்லும் போது மாற்றுத்துணி எடுத்துச் செல்கிறார் சாவித்திரிபாய். இன்று 21 ம் நூற்றாண்டை எட்டிவிட்டோம்.  பெண் குழந்தை களுக்கான தனிப்பள்ளிகள், பெண்கள் கல்லூரிகள்,  இருபாலர் பள்ளிகள் கல்லூரிகள் என்று இலட்சக்கணக் கான பெண்கள் படிக்கிறார்கள் என்றால் இவர்கள் அனை  வருக்காகவும் தன் மீது சேற்றாலும், மலத்தாலும் அடி வாங்கியவர் சாவித்திரிபாய்.

சாவித்திரிபாய் பூலேவும் அவரது கணவரும் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினர். 1848 ம் ஆண்டு பிதேவாடாவில் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை துவங்கினார்கள். மகாத்மா ஜோதிராவ் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் சாதிய அடக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்று போராட்டத்தை துவங்கியவர். அதற்கான முத்தாய்ப்பாக தனது மனைவி சாவித்திரிபாயை கல்வி கற்கச் செய்தார்.  சாவித்திரிபாயை ஆசிரியர் பயிற்சி பெற வைத்தார். தாங்கள் தொடங்கிய பெண்களுக்கான பள்ளியில் சாவித்திரியை  தலைமை ஆசிரியையாக அமர்த்தினார். சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டுவர வேண்டு மாயின் பெண்கள் தன்னைச்சுற்றி என்ன  நிகழ்கிறது என்பதை உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும். ‘இது ஏன் இப்படி நடக்கிறது?’ ‘நான் ஏன் இதை செய்ய வேண்டும்?’ இவை போன்ற அறிவுசார் கேள்விகளை பெண்கள் கேட்க வேண்டும். அவர்கள் அவ்வாறு மௌனம் கலைந்து கேள்வி கேட்க ஒரே வழி அவர்களுக்கு கல்வி அளிப்பதே என்று உணர்ந்தவர்கள் பூலே தம்பதியினர்.  உலத்தின் சிறந்த சொல் ‘செயல்’  செயல் மட்டும் தான். மகாத்மா ஜோதிராவின் சிந்தனைக்கும் சொற்களுக்கும் செயல் வடிவம் கொடுத்த மூலகர்த்தா சாவித்திரிபாய் பூலே.

பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அன்று சாவித்திரிபாய் தம் மீது சேற்றையும்  மலத்தையும் மட்டும் சுமக்கவில்லை. அன்றைய சமுதாயத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும், வெறுப்பையும் தாங்கினார். ஆண் களின் ஏச்சுகளும், கேலி பேச்சுகளும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இவை அனைத்தையும் எதிர்கொண்டே சாவித்திரிபாய் தன் பணியை தொடர்ந்தார். அப்படிப்பட்ட தன்னலமற்ற செயல்வீரரின் உழைப்பிலும் தியாகத்திலும் பலன் பெற்றவர்களே இந்தலைமுறை பெண்கள் அனை வரும். ஆனால் அவர் சுமந்த இன்னல்களின் ஒரு பகுதியை இன்றளவு நாங்களும் சுமந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பது தான் மிகுந்த வேதனையான செய்தியாகும். அதிலும் சுயமரியாதை கொண்ட  பெண்கள் தினம் தினம் பல போராட்டங்களை சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. பணி யிடத்தில் பாலின வேறுபாடுகளால் பெண்கள் பந்தாடப் படுகிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில் வேலைக்கு செல்லும் பெண்க ளின் நிலையை இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். அன்று சாவித்திரிபாய் பூலே மீது சேற்றை வாரி அடித்த இச்சமூ கம் தன் பழக்கத்தை இன்றளவும் மாற்றிக்கொள்வதாக இல்லை. அன்று சேறாகவும் மலமாகவும் இருந்தவை இன்று நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அவை கொடுஞ்சொற்களாக வும்  உதாசினங்களாகவும் பெண்களை பின்னுக்கு இழுக்க முற்பட்டுக்கொண்டே உள்ளன. 

பெண்களுக்கென்று எந்த ஒரு ஆதரவும் இல்லாத 19-ம் நூற்றாண்டில் தனக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வந்த இன்னல்களையும் தாண்டி சாவித்திரிபாய் தொடர்ந்து செயல்பட உந்து சக்தியாக இருந்தது எது?   அவ்வாறு பார்க்கும் போது சாவித்திரிபாய் பூலேவிடம் ‘சகிப்புதன்மை’ குறைவாக இருந்ததே அவரின் தொடர் செயல்பாடுகளுக்கு காரணமாக அமைந்தது. ஆம் கல்வி அறிவு பொறாத பெண்களால் எதிர்கால சந்ததியினர் படப்போகும் இன்னல்களை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவே பெண்களுக்கு கல்வியளித்தார். கல்வி அறிவு இல்லாமையாலும் வர்க்க முரண்பாடுகளாலும் பொருளாதாரத்தில் பின் தங்கி அதன் பொருட்டு கடன் சுமைக்கு ஆளாகி அவதியுறும் ஏழை, எளிய மக்களின் நிலையைகண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை அவரால். 

‘போ கல்வி கல்
சொந்தக்காலில் நில் சோராமல் உழை
உழை-ஞானத்தை செல்வத்தை சேர்
அறிவல்லாமல் போனால் அனைத்தும் அழியும்
கற்க பொன்னாக வாய்ப்பு இது
கற்று சாதியின் சங்கிலியை அறுத்திடுக

 

என்று தன் கவிதை வரிகள் முலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கருவுற்றதனால் தற்கொலைக்கு தள்ளப்படும் விதவை தாய்மார்களின் துயரை சதித்துக்கொள்ள முடியவில்லை அவர்களுக்கான விடுதியை அமைத்தார். பஞ்சத்தால் பசியில் வாடும் இளம் பிஞ்சுகளை சகித்துக்கொள்ள முடிய வில்லை-மாணவர் விடுதி ஏற்படுத்தினார். காதலர்கள் ஒன்று சேர்வதில் சாதிதடையாக இருப்பதை சகித்துக்கொள்ள முடியவிலை; காதல் திருமணங்களை தலைமையேற்று செய்து வைத்தார். கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை போடும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியவில்லை- நாவிதர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.  தன் கணவர் ஜோதிராவ் பூலே இறந்த போது சாதியின் பெயரால் தங்கள் வளர்ப்பு மகன் சிதைக்கு  தீமுட்டக்கூடாது என்று கயவர்கள் கூறியதை சகித்துக்கொள்ள முடியவிலலை. தன் கணவரின் சிதைக்கு தாமே தீ மூட்டினார்.

தன் கணவரின் இறப்பிற்கு பின் அவர் செய்து வந்த பணிகள் அவரோடு நின்றுவிடுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. மகாத்மா ஜோதிராவ் அவர்கள் விட்டுசென்ற பணிகளை தானே தலைமையேற்று  தொடர்ந்தார். சத்திய சோதக் சமாஜ்யத்தின் தலைமைபொறுப்பேற்று நடத்தினார். பிளேக் நோயால் மக்கள் கொத்துகொத்தாக மடிவதை சகித்துக்கொள்ள முடியவில்லை அவரால், மருத்துவ முகாம்கள் அமைத்து தன் மகனின் உதவியோடு நோயாளி களுக்கு சிகிச்சையளித்தார். நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை முகாமிற்கு கொண்டுவரும் வழியில் பிளேக் நோய் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்தார் சாவித்திரிபாய் பூலே.

இவ்வாறு ஏழை எளிய மக்கள் படும் துயரங்களை சகித்துக் கொள்ள முடியாத தன்மையும் அவர்களின் துயரை போக்க வேண்டும் என்ற அக்கறையுமே சாவித்திரிபாயை தொடர்ந்து செயல்பட வைத்தது. சாதி ஆணவக்கொலையில் தன் காதல் கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது தாங்காமல் ஏச்சுகளும் பேச்சிகளும் வாரி தெளித்த 21-ம் நூற்றாண்டே நீ சாவித்திரிபாய் பூலேவை படி! பெண்களே!, சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வே நமக்கு வழிகாட்டி. அவரை படியுங்கள்.  தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் வேலையை முன்னிலைப்படுத்தியவர் சாவித்திரிபாய் பூலே. அவர் காட்டிய பாதையில் பயணித்து வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குவோம்! எதிர்வரும் தலைமுறைக்கு பாதையை இன்னும் செம்மைபடுத்துவோம்.
 

கட்டுரையாளர் : புதுச்சேரியை சேர்ந்த  பள்ளி ஆசிரியை 

 

 

 

;