tamilnadu

img

மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல் - ச.லெனின்

பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில்  “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை  “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice) என்றே பயன்படுத்தியிருப்பார். இது  சிறை தணிக்கையிலிருந்து தனது  எழுத்துக்கள் தப்பித்து வெளியே  வர அவர் கையாண்ட வழிமுறையாக இருந்தபோதும் மிகச்சரியான உள்ளடக்கத்தைக் கொண்ட சொல்லின் மூலமாகவே அவர் அதனை எடுத்துரைத்திருந்தார்.  மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல, அது கோட்பாட்டையும், நடைமுறையையும் பிரிக்கவியலாத வகையில் ஒருங்கே கொண்டுள்ளதோடு, வரலாற்றுப் பெருவெளியின் அனுபவங்களோடும், படிப்பினைகளோடும் வளரும் ஒரு அறிவியலாகவும் அது திகழ்கிறது. ஆகவே  தான்  கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றளவும் ஒரு செயலூக்கம் கொண்ட பிரகடனமாகத் திகழ்கிறது. 

வரலாற்று ஆவணம் 

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 172 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிறகு எப்படி கம்யூனிஸ்ட் அறிக்கை எல்லா காலத்திற்குமானது போல் இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது?   இதற்கு மார்க்சின் வாக்கியங்களே நமக்கு பதில் அளிக்கின்றன:

“வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு சமூக அமைப்பும் நிலையற்ற தன்மையில் இருப்பதாகவே இயக்கவியல் கருதுகிறது. எனவே, அந்தந்த தருணத்தில் அது எவ்வாறு இருக்கிறது என்பதை மட்டுமல்ல, அதன் மாறிவரும் தன்மையையும் இயக்கவியல் கணக்கில் எடுத்துக்கொள்கிறது’  என்கிறார் மார்க்ஸ்.   ஆனால் இந்த மாறிவந்த தன்மைகளை கொண்டு மார்க்சோ, ஏங்கெல்சோ  தங்கள் காலத்தில் கூட அறிக்கையில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. ஏனெனில், “அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்று வரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஓர் அறிமுகவுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும்” என்று 1872ஆம் ஆண்டு அறிக்கையின் ஜெர்மன் பதிப்பிற்கு மார்க்சும், ஏங்கெல்சும் எழுதிய முன்னுரையில் விளக்குகின்றனர்.  

எனவேதான் கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகள் எல்லாம் கால ஓட்டத்தின் அனுபவங்களிலிருந்து அறிக்கையில் உள்ளடக்க வேண்டிய அம்சங்களை கொண்ட அறிமுகவுரையாகவே அமைந்துள்ளன. அறிக்கை வெளியான காலத்திற்கு பிறகான வளர்ச்சிப் போக்குகளை அலசி ஆராய்ந்து குறிப்பிட வேண்டிய அம்சங்களே  இந்த ‘முன்னுரை’ எனப்படும் அறிமுகவுரைகளாக விளங்குகின்றன. 

புரட்சிகர சக்தியாக தொழிலாளி 

அறிக்கை  எழுதப்பட்ட காலப்பகுதியில் முதலாளித்துவ புரட்சிகள்தான் எழுந்தனவே அன்றி தொழிலாளி வர்க்க எழுச்சிகள் இல்லை. “அக்காலம் வரை நடைபெற்ற புரட்சிகள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் பெரிய பங்களிப்பை ஆற்றியிருந்த போதிலும் அது தலைமைப் பாத்திரம் வகிக்கவில்லை. முதலாளித்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் நிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை விடுவித்து அதனுடைய சொந்த உரிமையின் அடிப்படையில் அதனை புரட்சிகர சக்தியாக வரலாற்று அரங்கில் உயர்த்திட மார்க்ஸ் விரும்பினார் என்கிறார் பேராசிரியர் அய்ஜாஸ் அகமது.   மார்க்சும் ஏங்கெல்சும் தங்கள் எழுத்துக்களில் மூன்று அம்சங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தினர். அவை 1. முதலாளித்துவத்தின் வரலாறு மற்றும் அதன் அரசியல் பொருளாதாரத்தை முழுமையான முறையில் பரிசீலித்தல், 2. ஆளும் வர்க்கத்தின் சமகால அரசியல் போக்குகள், 3.தொழிலாளர்  இயக்கம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சனைகள் ஆகியவையாகும். கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்ட காலத்திற்கு முன்பும், பின்பும் இதுவே அவர்க ளின் எழுத்துக்களில் முன்நின்றது. இவைகளை உள்ள டக்கிய அவர்களின் படைப்புகளைக் கொண்ட மார்க்சியம் எனும் மாளிகையின் மையத்தூணாக கம்யூனிஸ்ட் அறிக்கையே விளங்குகிறது என்கிறார் அய்ஜாஸ் . 

அறிக்கை வெளியானதற்குப் பிறகுதான் 1871ல், தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு தலைமையின் கீழ் பாரீஸ் கம்யூன் அமைக்கப்படுகிறது. ஆனால்  மிக குறுகிய காலத்திலேயே அந்த பிரெஞ்சுப் புரட்சி வீழ்த்தப்படுகிறது. தொழிலாளி- விவசாயி கூட்டணி குறித்தும், பழைய ஆளும் வர்க்கம் கட்டமைத்த அரசு கட்டமைப்பை தகர்க்க வேண்டியதன் அவசியத்தையும் பாரீஸ் கம்யூனின் அனுபவத்தின் வழியில் அறிக்கையின் அறிமுகவுரை சொல்லிச் செல்கிறது. ஆனால் அறிக்கையின் அடிப்படை யான கோட்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை மேற்சொன்ன முன்னுரையிலேயே “...நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டு மொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும்” என்று மார்க்சும் ஏங்கெல்சும் குறிப்பிட்டுள்ளனர்.  

சுரண்டலின் தன்மை மாறியுள்ளது; ஆனால் சுரண்டல் நீடிக்கிறது. சுரண்டலுக்கு முடிவு கட்டும் வரை அறிக்கையின் பொதுக் கோட்பாடு தொழிலாளி வர்க்கத்திற்கு வழிகாட்டும். “(முதலாளித்துவம்) தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகை படைக்கிறது... மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப் படுத்தியுள்ளது. சொத்துக்களை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுத்தலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறை களைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன” என்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை (பக்:47). உலகமயத்தையும், நகர்மயமாதலையும், தனியார் மயத்தையும், அம்பானி அதானிகளின் சொத்துக்குவிப்பை யும், மத்திய அரசின் அதிகார குவிப்பு மற்றும் மாநிலங்க ளின் உரிமை பறிப்பு உள்ளிட்ட தற்போதைய இந்திய நிலை மைகளை அறிக்கையின் இந்த பகுதி நம்கண்முன்னே நிறுத்துகிறது. 

மண்ணுக்கேற்ற மார்க்சியம் 

அந்தந்த நாட்டில் நிலவும் சமூக நிலைமைகள், மாறி வரும் தன்மைகளைக் கருத்தில் கொண்டே அடுத்தடுத்த காலகட்டத்திற்கு மார்க்சியர்கள் மார்க்சியத்தை வளர்த் தெடுத்து வந்துள்ளனர். மார்க்சுக்கும்  ஏங்கெல்சுக்கும் பிறகான தத்துவார்த்த இடைவெளியை லெனின் இட்டு நிரப்பினர் என்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக். மார்க்சி யத்தின் உயிர்த்துடிப்புள்ள வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும்  ரோசா லக்சம்பர்க், கிராம்ஷி, மாவோ, ஸ்டாலின், ஹோசி மின், பிடல் காஸ்ட்ரோ, இஎம்எஸ் உள்ளிட்ட தலைவர்கள்  களத்திலும், கருத்தாலும் அளப்பரிய பங்காற்றியுள்ளனர்.  உலக கம்யூனிஸ்டுகளின் இதுபோன்ற அளப்பரிய பங்களிப்பே அறிக்கையை உழைக்கும் மக்களுக்கான உயிர்த்துடிப்புள்ள ஆவணமாக இன்றளவும் நிலைத் திருக்கச் செய்துள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கையின் வழியில் ஒவ்வொரு நட்டின் தன்மைக்கு ஏற்ற வகையில் அந்தந்த நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அதன் திட்டங்களை வகுத்தன.  

முந்தைய சமூக அமைப்புகளை விட “முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது. எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது” என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இதை அப்படியே இந்திய சமூக நிலைக்கு பொறுத்த முடியாது. ஏனெனில் அறிக்கை கூறுவதுபோல் “ஒரு புரட்சிகர வர்க்கமாக இந்திய முதலாளித்துவ வர்க்கம் உருவாகவில்லை.”   மார்க்சியத்தின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் அறிக்கை யின் ஒளியில் இந்திய தன்மைக்கு ஏற்ப இந்திய கம்யூ னிஸ்டுகள் ஒரு நீண்ட நெடிய தத்துவார்த்த போராட்டத்திற்கு பிறகு இந்திய புரட்சிக்கான வழிமுறையை உருவாக்கினர். அதுவே மண்ணுக்கேற்ற மார்க்சியமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமாக விளங்குகிறது. 

அறிக்கையின் வழியில்... 

“இன்றைய இந்திய அரசு என்பது பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அந்நிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின்  பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது என்று இந்திய ஆளும் வர்க்கம் குறித்த தனது தெளிவான பார்வையை கம்யூனிஸ்ட் அறிக்கையின் வழி நின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கிறது. 

அதேபோல்  ‘இந்திய முதலாளிகளோ முதலாளித்து வத்திற்கு முந்தைய சமூகத்தை உடைத்தெறிய முன்வர வில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அதற்கு முந்தைய சமூகம் நொறுக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கிய முன் நிபந்தனையாகும்.’ ஆனால் அதை கூட இந்திய முதலாளி வர்க்கம் செய்யத் துணியாமல் பழைய நிலப் பிரபுத்துவ சமூகத்தோடு சமரசம் செய்துகொண்டு தனது சுரண்டலுக்கான வழியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவம் செய்யத் தவறியதை மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் செய்ய வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.

‘கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது’, “பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகத்  கட்டியமைத்தல், முதலா ளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” என்பதே கம்யூ னிஸ்டுகளின் நோக்கமென்று கம்யூனிஸ்ட் அறிக்கை முழங்குகிறது. அதன் வழியில் அறிக்கை முழங்கியுள்ள பிரகடனத்தை இந்தியாவில் சாத்தியப்படுத்துவதற்கான வழிமுறையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் மக்கள் ஜனநாயக புரட்சியாகும்.

கட்டுரையாளர்: சிபிஎம் தென் சென்னை 
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்




 

;