tamilnadu

img

உயிர்க்கொல்லி நோய் கொரோனாவிலும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை

நமது நாட்டில் 80 சதவீத மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். 60 சதவீத மக்கள் தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுகிறார்கள். மொத்த படுக்கை வசதிகளில் 60 சதம் தனியார் மருத்துவமனைகளில் தான் உள்ளது. கொரோனா தொற்று தடுப்புநடவடிக்கைக்காக அரசு ஊரடங்கு அறி வித்தவுடன் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. கொரோனா நோய் சிகிச்சையை பெரிதும் அரசு மருத்துவமனைகளே செய்துவருகின்றன. ஊரடங்கு காலத்தில் இதர நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள். பெரும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்தபின் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா சிகிச்சை அளிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை கோவிட்-19 கொரானா நோய் தொற்றுநோயாளிகளிடம் இருந்து நாள் ஒன்றிக்குரூ.42,000- கட்டணம் வசூலிக்கப்படு கிறதாம். அவசர சிகிச்சைப்பிரிவில் இல்லாமல் இருந்தால் ரூ.10,000- முதல் ரூ.20,000 வரை வசூலிக்கிறார்கள். அவசர சிகிச்சைபிரிவாக இருந்தால் கூடுதலாக 55 சதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தில்லியில் உள்ள ஒர் கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகம் ஒரு நோயாளியிடம் ரூ.6.7 லட்சம் கட்டணம் கேட்டதாம்.அதில் பாதிக்கு மேற்பட்ட கட்டணங்கள் தேவையற்றது என்பதால் காப்பீட்டு நிறுவனம் கட்டணத்தை வெட்டி சுருக்கியுள்ளது குறைக்கப்பட்ட தொகையை நோயாளி தரவேண்டும் என காப்பீட்டு நிறுவனம் கோரியதாம். இன்னொரு மருத்துவமனையில் 1300 கையுறைகள் பயன்படுத்தியதாக கட்டணம் கேட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனம் கேள்வி எழுப்பி வெளியில் சொல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டு அதற்கான கட்டணத்தை அகற்றி இருக்கிறது. 

சிகிச்சை அளிப்பதிலும் தங்களால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் போதுநோயாளிகளை அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளன. சென்னையில் ஸ்டான்லி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்ட நோயாளிகள் அங்கு சென்றவுடன் உயிர்இழப்பு ஏற்பட்டு இருக்கிறது . நோயாளி கையில் பணம் இருக்கும் வரைக்கும்தான் சிகிச்சை என்ற கொடுமைகள் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளிகள் இரவு நேரங்களில் தான் அனுப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் உள்ளன. 

தொடர் சிகிச்சை தேவைப்படும் புற்றுநோய், காசநோய், சிறுநீரகபாதிப்பு, பக்கவாத பாதிப்பு இவைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படுகிறது. மும்பையில் ஜெய்தீப் ஜெய்வந் என்ற 55 வயது வழக்கறிஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான கீமோதெரபி, சிறுநீரக பாதிப்பிற்கான டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை, நெஞ்சுவலி வந்தால் கூட தடுப்பூசி போடுவது கிடையாது . தடுப்பூசி போட வேண்டிய அவசர நேரத்தில் கூட தடுப்பூசி குழந்தைகளுக்கு உட்பட போடப்படுவது இல்லை என்ற அவலமான கார்ப்பரேட் மருத்துவமனைகள் உள்ளன. 

முடிவில் கொரோனா சிகிச்சை பெறும்நோயாளிகளிடம் பலமடங்கு கட்டணம் கொள்ளையடிக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாக நிலம் உட்பட பல சலுகைகளை அரசு அளிக்கிறது.அரசு சலுகைகளை பெற்ற தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றின்பேரிடர் காலத்தில் ஏன் இலவசமாக சிகிச்சைஅளிக்க கூடாது? அரசு அதற்கான உத்தரவை ஏன் பிறப்பிக்கவில்லை? என்ற கேள்வியை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு எழுப்பியுள்ளது. இது மக்களின் மனசாட்சியின் கேள்வியாகும்.மத்திய, மாநில அரசுகள் உலகத்தில் நிலவி வரும் இப்பேரிடர் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மக்களுக்கான மருத்துவம் அரசின் பொறுப்பு என்ற நிலைக்கு வருமா ? தனியார் மருத்துவமனைகளை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமா? தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையை தடுக்குமா? கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் இலவச ஆலோசனைகளை கூறுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கட்டும். கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் கொரோனா கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கை போல் தமிழக அரசும் எடுத்திட வற்புறுத்துவோம். கொரோனா வைரசை தடுக்க மக்கள் ஒன்றுபட்டு நிற்போம். கொரோனா வைரசை விட மோசமாக மக்களை பாதிக்கும் அரசின் தனியார்மய கொள்கையை தடுப்போம்..!

கட்டுரையாளர் : ஆர். மனோகரன், சிபிஐ(எம்), தஞ்சாவூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

;