tamilnadu

img

தூக்கி எறிந்திடுவோம் ஸ்டெர்லைட்டை!

1
பன்னாட்டு தொழில் நிறுவனமான ஸ்டெர்லைட் மகராஷ்ட்ரா மாநிலம் ரத்தினகிரியில் இருந்து மக்களால் அடித்து விரட்டப்பட்ட பிறகு அதனை தென் தமிழகத்தில் திறந்திட, விரட்டப்பட்ட இரண்டு வாரத்திற்குள் ராஜமரியாதை வழங்கப்பட்டது. 
அயல் நாட்டு தொழில்நுட்பத்துடன் செயல்படுவதாக கூறிய ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட்டை மூடிட சென்னைஉயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு உச்சநீதி
மன்றத்தின் இடைக்காலத் தடை பெற்று தொடர்ந்து இயங்கியது. மக்களும் அறவழியில் ஸ்டெர்லைட்டுக்குஎதிராக தொடர்ந்து போராடினர்.நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பெற்ற ஸ்டெர்லைட் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் அதன் இரண்டாவது யூனிட்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற விபரம் தெரியவந்தவுடன் தூத்துக்குடி நகரையும், அதன் சுற்றுச்சூழல்களையும், நிர்மூலமாக்கி தலைவிரித்தாடிய முதலாளித்துவ இலாப வெறிக்கு மக்கள் இரையாகிடவில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆலைக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த மக்கள் போராட்டங்களின் காரணமாக 31.03.2018-க்கு பிறகு தமிழக அரசால் அனுமதி நீட்டிக்கப்படவில்லை. 99 நாட்களாக அறவழியில் போராடி வந்த மக்கள் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கையில் 22.05.2018 அன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பலர் இறந்துபோனார்கள். பலர் குண்டு காயமுற்றார்கள். தங்களது ஜீவாதார உரிமைக்காக சுற்றுச்சூழலை சீர்குலைத்து வந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது மேற்படி ஆலைக்கும், அவர்களுக்கு ஜாலரா போடும் குழுவினராலும் நடத்தப்பட்ட வன்முறைகளினால் தூத்துக்குடி நீலம் பாரித்த நிலமாகியது.

2
இந்தியா சுயசார்புடைய நாடாக இருந்திட வேண்டுமானால் மக்களின் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட்டை திறந்திட வேண்டுமென்று அனில் அகர்வால், அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் உள்ள மத்திய பாஜக அரசிடம் 09.06.2020 அன்று கடிதம்வழங்கினார். ஆளும் வர்க்கத்தின் அபிலாஷை களுக்கு நீதிமன்றம் செவி சாய்த்திடாமல் யாராக இருந்தாலும் சட்டம் ஒன்று தான் என்று 18.08.2020 அன்று ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடிட சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

3
வழக்கம் போல் எதற்கும் தான் பொறுப்பாளி அல்ல என்று நீதிமன்றத்திற்கு சென்ற ஸ்டெர்லைட்டின் வண்டவாளங்கள் தோலுரித்து காண்பிக்கப்பட்டதினால் பிரிட்டனைச் சார்ந்த அனில் அகர்வாலின் ஆசைகள் நிராசைகளாகி விட்டன.

4
தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், இடதுசாரி வழக்கறிஞர்கள் உள்ளிட்டுஸ்டெர்லைட்டுக்கு எதிராக வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த செழுமையான எதிர்வாதங்களின் தொடர்ச்சியாக 08.01.2020 அன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் 222 நாட்கள் கழித்து 18.08.2020 அன்று ஆலையை மூடிட சென்னை உயர்நீதிமன்றத்தினால் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட்டுக்காக ஆனந்த தாண்டவம் ஆடிய அதன் சில தூதுவர்கள் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும், வாதுரைகளையும் ஒருங்கிணைத்து  38 வினாக்களை எழுப்பி இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தால் 84 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் 5 முன் தீர்ப்புகள், அலசி ஆராயப்பட்டுள்ளன. 626 பத்திகளும் அதனுள் பல உப பத்திகளும் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

5
ஸ்டெர்லைட்டை திறந்திட 02.04.2013 அன்று உச்சநீதிமன்றம்   அனுமதி வழங்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்திவிட்டுள்ள நிலையில் மேற்படி தீர்ப்பு தேதிக்கு முன்பு தங்கள் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் ஏழு வருடங்கள் கழித்து கூறுவது நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்க்கப்பட்ட விஷயங்களை மீண்டும்விசாரணைக்கு உட்படுத்திட முடியாது என்ற முன் தீர்ப்புதடை சட்டக்கோட்பாட்டின்படி செல்லாத வாதம் என்றகூற்று ஸ்டெர்லைட்டுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் இடித்துரைத்துள்ளது.தமிழக அரசு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுவாரிய உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட்டால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் என்ற நிலையில்   சென்னை உயர்நீதிமன்றம்நீதிமுறையில் சீராய்வு செய்திடும் போது பெருவாரியான மக்களின் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் அதிலும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் மேற்படி முன் தீர்ப்பு தடை சட்டக்கோட்பாடானது பொருந்தாது என்று உச்சநீதிமன்ற முன் தீர்ப்புகளின்படி முடிவு கண்டுள்ளது.மேலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறுவது போல், ஸ்டெர்லைட் இயங்கிட தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அந்த அனுமதி கடிதங்களில் உள்ள நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்ற போது அதிலும் ஸ்டெர்லைட் தவறிழைத்துள்ளதற்குத் தான் உச்சநீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் ஆலையை மூடிடும் உரிமை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் விசாரணைக்கு  உட்படுத்தியுள்ளது.

6
இயற்கை நியதி கோட்பாடுகளுக்கு முரணாகதங்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கிடாமல் ஆலையை மூடிட உத்தரவிட்டது தவறு என்று நீதிமன்றம் முடிவு செய்யும் பட்சத்தில்  மீண்டும் ஒருமுறை வாய்ப்புகொடுத்து தகுதியின் பேரில் உத்தரவிடுமாறு கூறிட வாய்ப்புள்ளதினால் தான் எந்த தவறும் செய்திடவில்லை என்றுஸ்டெர்லைட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதுரை செய்ய ஆரம்பித்தது. எனவே  ஐந்து காரணங்களுக்காக ஸ்டெர்லைட் மூடப்பட்டாலும் அதன் மீதான இதர  குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது.

7
ஸ்டெர்லைட்டின் முதலாவது யூனிட்டிற்கு ஒதுக்கீடு   செய்யப்பட்டுள்ள நிலம் 102.31 ஹெக்டேர் தான். ஆனால் தனது    அனுபவ பாத்தியதையில் இல்லாத நிலங்களையும் சேர்த்து  தனக்கு 172.17 ஹெக்டேர் நிலம் இருப்பதாக மோசடியாக கூறி வந்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகமானது  ஆலையில் 500 மீட்டர் அளவிற்கு பசுமை வளையம்  இருக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் தமிழ்நாடு மாசு   கட்டுப்பாட்டு வாரியம் அதனை 250 மீட்டராக குறைத்து பின்னர்  ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக மீண்டும் 25 மீட்டராக    குறைத்துள்ளது. இதன்படிக்கு ஸ்டெர்லைட்டின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதம்   பசுமை வளையத்திற்காக இருப்பதற்கு பதில் 10.8 சதவீதம் தான்    உள்ளது. இதனால் தூசு மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் சுற்றுச்சூழல் மேலும் மேலும் பாழாகியுள்ளது. மேலும் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு    340 டன் காப்பர் உற்பத்தி செய்திட வழங்கப்பட்ட அனுமதி    தனித்தனியாக கூட்டப்பட்டு ஒரு நாளைக்கு 1200 டன் என்ற  அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பிற்கு இணங்க  பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் உற்பத்தி கூடிடும்போது பசுமைவளையத்தின் அளவும்  கூடுதலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்  கூடுதலாக்கப்படவில்லை. மேலும் உற்பத்தி அதிகரிக்கும் போது தொழிற்சாலையின் கழிவுகள் அதிகளவில் வெளியேறியிருக்கும்.

8
தமிழ்நாடு நகர திட்டமிடுதல் சட்டத்தின் கீழ்    தூத்துக்குடிக்கான மாஸ்டர் பிளான்படி ஸ்டெர்லைட்   அமைந்துள்ள மீளவிட்டான் கிராமமானது பொது தொழிற்சாலைகள் அமையும் பகுதி என்று தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி 
கிராமமானது  சிறப்பு     பொருளாதார மண்டலத்திலோ அல்லது அபாயகரமான  தொழிற்சாலைக்கான வகைப்படுத்தப்பட்ட  பகுதியிலோ  அமைந்திடவில்லை என்பதினால் 1994-ம் வருடம்   ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதே தவறு .இந்த அனுமதி மோசடியாக பெறப்பட்டுள்ளதினால் 20 வருடங்களாக  ஸ்டெர்லைட் செயல்பட்டு வந்தாலும் மேற்படி மோசடி எந்த  நிலையிலும் விசாரணைக்கு  உட்பட்டதே.

9
மன்னார் வளைகுடா உயிர்கோளப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திட 30.04.2003 அன்றே பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும் கூட இந்த விஷயத்தில்    அரசு மறைமுகமாக ஆதாயம் பெறும் பயனாளியாக    இருப்பதால்அரசிதழில் உரிய அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஒருவேளை அரசானது மன்னார் வளைகுடா பகுதி தொடர்புடைய அறிவிக்கையை முறையாக உரிய     காலத்திற்குள் வெளியிட்டிருந்தால் ஸ்டெர்லைட்டும் வெளியேற  வேண்டியதிருக்கும்.

10
தொழிற்சாலை கழிவான கருப்பு மண் (காப்பர் சிலாக்) 3.52   லட்சம் டன் அளவில் மலை போல் ஒரே பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதினால் நிலம், நீர் மாசுப்பட்டிருக்கும். மேலும்   இந்த கருப்பு மண் உப்பாறு ஓடையின் வழிப்பாதையை      அடைத்திருக்கும். இந்த கருப்பு கழிவு மண்ணை பள்ளங்களை   நிரப்ப பயன்படுத்தலாம் என்று 25.09.2010 அன்று ஸ்டெர்லைட் தனியாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடம் வழங்கி விட்டதாக கூறினாலும் மேற்படி ஒப்பந்தத்தில் இந்த மண்ணை வேறு யாருக்கும் விற்பனை செய்திட கூடாது என்று நிபந்தனை   உள்ளநிலையில் 6 வருடங்கள் கழித்து 14.07.2016 அன்றுதான்   மாவட்ட  ஆட்சியர் மேற்படி கழிவு மண்ணை அகற்றிட தனியார்களுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.இந்த கழிவு மண்ணை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடத்தியுள்ள கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தும் கூட  உண்மைகளுக்கு புறம்பாக மாவட்ட நிர்வாகம்  ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்துள்ளது. மேற்படி காலக்கட்டங்களில் தவறிழைத்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு   வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

11
அபாயகரமான கழிவுகளை கையாளுதல் மற்றும்   அகற்றுவதற்காக ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி 09.07.2013 அன்றே காலாவதியாகி இருந்தும் கூட அதன்  பிறகுமேற்படி சட்டத்திலோ, விதிகளிலோ இடமில்லாத   சூழ்நிலைகளில் தங்களது அனுமதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மீண்டும், மீண்டும் திருப்பப்பட்டதாக கூறி ஸ்டெர்லைட் தொடர்ந்து  இயங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானதாகும். இவ்வாறு சட்டவிரோதமாக இயங்கிட    காரணமான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

12
உச்சநீதிமன்றமே ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி    வழங்கியுள்ள நிலையில் அதற்கு பின்னரும் மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவது நீதிமன்றத்திற்கு எதிராக போராடுவதாகும் என்று ஸ்டெர்லைட் முன் வைத்த மடைமாற்றும் வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பொதுமக்கள் ஸ்டெர்லைட்டின் சுற்றுச்சூழல்   சீர்கேட்டை கண்டித்து தான் போராட்டம் நடத்தியுள்ளார்களே தவிர நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக போராடிடவில்லை  என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

13
மேலும் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான தமிழக அரசின்  முடிவானது கொள்கை முடிவு இல்லை என்று ஸ்டெர்லைட் முன்    வைத்த வாதத்திற்கு மாறாக, நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு    சட்டம், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் ஆகிய     சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்   அடிப்படையில் ஸ்டெர்லைட்டை மூடிட தமிழக அரசு எடுத்த முடிவு சரி தான் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

14
ஸ்டெர்லைட்டை மூடிட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு சுற்றுச்சூழலை பாழ்ப்படுத்தி இயற்கை   வளங்களை கொள்ளையடித்து, இலாபம் ஈட்டிட நினைக்கும் பன்னாட்டு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்பதை முதலாளித்துவ சமூகம் உணர்ந்திருக்கும். இனி உச்சநீதிமன்றத்தில் நடக்க இருக்கும் சட்டவல்லுநர்களின் வாதங்களை பொறுத்து   பொதுமக்களின் கோரிக்கையானது உச்சநீதிமன்றத்தினாலும் அங்கீகரிக்கப்படும்.

15
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1994-ம் வருடம்     உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு,   அதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்குகளில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு   பெரும் பங்காற்றியுள்ளது. ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சிஐடியு   உள்ளிட்ட பல்வேறு தோழமைச் சங்கங்களும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன. 
அதே போல் 2018-ம் வருடம் தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் அதன்பிறகான சமீபத்திய சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளில் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான வலுவான எதிர்வாதங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு எடுத்து வைத்துள்ளதுடன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகளை தொடர்ச்சியாக நடத்தி பொதுமக்களின் நலன்களை பாதுகாத்து வருகின்றது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற்ற ஒரே தேசிய அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். மேலும் துப்பாக்கிச்சூடு தொடர்பான விவகாரத்தில் புகார் மனுஅனுப்பி வழக்கு தாக்கல் செய்து புகார்தாரராக இருந்து வருவதுடன் சிபிஐ வழக்கு நடவடிக்கைகளில் மதுரை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பங்குபெற்ற ஒரே தேசிய அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.தூத்துக்குடி மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருவதோடு சுற்றுச்சூழலை நமது சந்ததினருக்கு பாதுகாப்பாக விட்டு செல்வது அனைவரின் கடமை என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் என்றும் பயணிக்கும்.

====இ.சுப்புமுத்துராமலிங்கம்===
                 வழக்கறிஞர்

;