tamilnadu

img

வேளாண் நிலம் : மராட்டிய மாநிலத்தில் இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பெண் விவசாயிகள்

மராட்டிய மாநிலத்தில் பல வருடங்கள் மழை இல்லாமல் மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் பெண் விவசாயிகள் அமைதியான முறையில் மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கு ஆண் விவசாயிகள் அனைவரும் பணப் பயிர்களான கரும்பு, பருத்தி போன்றவற்றை சாகுபடி செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். குறிப்பாக அதிகப்படியாக பாசன நீர் உள்ள போது பணப் பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். அதனால் மழை பொய்த்துவிட்டால் ஏற்படும் கடும் வறட்சியால் அதிகப்படியான இழப்புகளை சந்தித்து வந்தனர்.

இத்தகைய நடைமுறைச் சூழலில் பெண் விவசாயிகள் அதிக அளவில் வேளாண் பணிகளில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. ஆண்கள் கடும் வறட்சிகள் மற்றும் இழப்புகள் காரணமாக நகரங்களை நோக்கி புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி இடம் பெயர்கின்றனர். கடந்த 2017 - 2018 பொருளாதார ஆய்வுகளின்படி கிராமப்புறங்களில் உள்ள ஆண் விவசாயிகளின் தொடரும் இடப் பெயர்வு காரணமாக வேளாண் துறை பெண்மயமாக மாறி வருவதாக தெரிவிக்கிறது. இதனால் கிராமப்புற பெண்கள் சாகுபடியாளர்களாக, தொழில் முனைவோராக மற்றும் தொழிலாளிகளாக மாறி வருகின்றனர். அதனால் ஆண் விவசாயிகளை போல், அதிக தண்ணீர் தேவைப்படும் பணப் பயிர்கள் சாகுபடியில் ஈடுபடாமல் பெண்கள் குறைந்த நீர், முதலீட்டில் அதிக அளவு லாபம் தரும் பாரம்பரிய காய்கறிகள், உணவு தானிய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். வேளாண் சந்தையின் தேவைக்கேற்ப சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளாமல் தங்களது உயிரைப் பாதுகாக்கும் வகையில் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் குடும்ப உணவுத் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் சாகுபடி பணிகளில் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை.

மேலும் சுய உதவிக் குழுக்களாக இணைந்து இயற்கை உரம் உற்பத்தியிலும் ஈடுபட்டு அதிகம் லாபம் ஈட்டி வருகின்றனர். அரசின் பல வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவி மற்றும் வழிகாட்டல் வாயிலாக கிராமப்புற பெண்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் காரணமாக வறட்சியால் ஏற்படும் விவசாயிகள் தற்கொலைகள் தடுக்கப்பட்டு பல ஆயிரம் பெண் விவசாயிகள் கடுமையான வறட்சி மற்றும் வறுமையை எதிர்கொண்டு மிகவும் சிறப்பான முறையில் வெற்றி பெற்று வருகின்றனர்.இதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக அளவு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள மராத்வாடா மாவட்டத்தின் பெண் விவசாயிகளின் இயற்கை வேளாண் முயற்சிகள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலைகளை தடுத்துள்ளது என்பதே மறைக்க முடியாத உண்மையாகும்.

====பேரா. தி.ராஜ்பிரவின்====

;