tamilnadu

img

வெள்ளாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை

வெள்ளாட்டுக்கான தீவனத்தை ஐந்து வகையாக பிரிக்கலாம்.
1. அடர்தீவனம்
2. உலர்தீவனம்,பச்சை தீவனம்
3. இணை உணவு.
4. தாதுஉப்பு கலவை.
5. வைட்டமின் கலவை.

அடர்தீவனம்
அடர்தீவனம் என்பது குறைந்த அளவு நார்பொருட்களையும், அதிகஅளவு ஜீரணிக்க தக்க சத்துக்களையும் உள்ளடக்கியது.அடர்தீவனத்தை நாமே தயாரித்து சேமித்து வைக்கலாம்.அடர்தீவனத்தில் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுசத்துகள் உள்ளடக்கிய எரிசக்தி நிறைந்த பொருட்களான மக்காச்சோளம், கம்பு, அரிசிகுருணை, அரிசி தவிடு, கோதுமை தவிடு,சோளம்,மொலாசஸ் எனப்படும் சர்க்கரை ஆலைக் கழிவு.உடல் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான புரதம் மற்றும் கொழுப்புசத்துக்களை உள்ளடக்கிய பொருட்களில் கடலைபுண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, பருத்திவிதை புண்ணாக்கு மற்றும் பயறு வகை பொட்டுகள்.எரிசக்தியையும், புரதசத்தையும் சரிவிகிதத்தில் கலந்து வளர்ந்த ஆடுகள், குட்டிபோட்ட ஆடு
கள் ஆகியவற்றிற்கு நாளொன்றிற்கு 50 கிராம் அளவில் தரலாம்.குட்டிகள் (ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்கள்) 40%எரிசக்தி + 60% புரதம் அடர்தீவனத்தின் அளவு: 50 கிராமிலிருந்து படிப்படியாக அதிகரித்து 300 கிராம் வரை.
வளரும் இளம் ஆடுகள், கருவுற்ற ஆடுகள்.இனச்சேர்க்கைக்கு தயார்படுத்தும் பெட்டைஆடுகள், பொலிகிடா. 30% எரிசக்தி + 70% புரதம்.

அளவு : 300 கிராமிலிருந்து 750 கிராம் வரை, மூன்று வேளைகளாக பிரித்து தரலாம்.
பாலூட்டும் ஆடுகள்
70% எரிசக்தி + 30% புரதம்.
அளவு: 500 கிராமிலிருந்து 750 கிராம் வரை,மூன்று வேளையாக அசோலா கலந்து தரும்போது பாலின் தரம் மற்றும் அளவு கூடும்.

உலர் மற்றும்  பச்சை தீவனம்
உலர் மற்றும் பச்சை தீவனங்கள் அதிகஅளவு நார்சத்து பொருட்களை உள்ளடக்கியதாகும்.சுபாபுல், அகத்தி, வேலிமசால், முயல்மசால், நேப்பியர்புல், கோ4, கோஎப்எஸ் 29, தீவன சோளம் ஆகியன பசுந்தீவனங்களிலும், காய்ந்த வேர்கடலை கொடி, உளுந்து செடி, கோதுமை தாள், மக்காசோளதட்டை, சணப்பை, ஊறுகாய்புல் (சைலேஜ்) ஆகியன உலர்தீவனங்களிலும் அடங்கும்.இந்த தீவனங்களால் கிடைக்கும் அதிக அளவு நார்சத்தினால், ஆடுகளுக்கு வயிறு நிறைந்த உணர்வை தரும்.ஆனால் செரிக்க கூடிய சத்துக்கள்குறைவாகவே கிடைக்கும்.

இணை உணவு
இணை உணவு என்பது ஆடுகளின் உடல்நலத்தினை எப்போதும் ஒரே சீராக வைத்திருக்க உதவும்.எடுத்துகாட்டாக வளர்ச்சியினை ஊக்கப்படுத் தும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் டெராமைசிஸ், எலும்பு வளர்ச்சிக்கான ஆஸ்ட்ரோ கால்சியம், உணவில் நச்சுதன்மை ஏற்படாமல் தடுக்க டாக்ஸின் பைண்டர் போன்றவைகளை இணை உணவு எனக் கூறலாம்.

தாதுஉப்பு கலவை
தாது உப்பு கலவை வெள்ளாடுகளின் உடல் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது.சாதாரண சமையல் உப்பு, கிளிஞ்சல், சுண்ணாம்பு, எலும்புத்தூள் போன்றவைகளில் எளிதில் தாதுஉப்பு கிடைக்கின்றது.தாதுஉப்பு கலவை சரிவிகிதத்தில் அளிக்கும் போது ஆடுகளின் உணவு உட்கொள்ளும் தன்மையும், சினைபிடிக்கும் தன்மை, பெட்டை ஆடுகளில் தரமான கருமுட்டை உற்பத்தி, குட்டிகளின் வளர்ச்சி விகிதம், பொலிவான உடல்அமைப்பு ஆகியன அதிகரிக்கும்.தாதுஉப்பு கலவையை அடர்தீவனத்திலோ அல்லது தாதுஉப்பு கட்டிகளை பண்ணைகளில் கட்டி தொங்கவிடும் போது, ஆடுகள், அவற்றின் தேவையின் போது நாக்கினால் நக்கி அவற்றின் தேவையை சரி செய்து கொள்ளும்.

வைட்டமின் கலவை
வைட்டமின் எனும் உயிர்சத்து கலவை, ஆடுகளுக்கு அவற்றின் வழக்கமான உணவிலேயே கிடைத்துவிடும்.வைட்டமின்களில் அத்தியாவசியமானதாக A,D,E ஆகிய வைட்டமின்கள் விளங்குகின்றது.ஆடுகளின் தீவனங்களில் வைட்டமின் E போதுமான அளவு கிடைத்துவிடுகிறது.ஆனால், வைட்டமின் A,D ஆகியன நிறைவாக, சரியான அளவில் கிடைப்பபதில்லை.பெருவயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வெள்ளாடுகளுக்கு தேவையான B காம்ப்ளக்ஸ் வைட்டமின்னை உற்பத்தி செய்துவிடுகிறது.ஆடுகள், சூரியஒளியின் மூலம் தோலிலுள்ள கொழுப்பு சார்ந்த பொருட்களை கொண்டு வைட்டமின் D தயாரித்து கொள்கிறது.வெயிலில் காய்ந்த புற்கள், தழைகள் மூலமும்வைட்டமின் D கிடைக்கிறது.வைட்டமின் A பசுந்தழை மற்றும் புல்களின் மூலமாகவே ஆடுகள் பெற்று கொள்கின்றன.வெள்ளாடுகளுக்கு தீவனத்தில் சிறப்பு கவனம் மேற்கொள்வது அறிவியல் சார்ந்த விசயம்மட்டுமல்ல, அது அறிவியலை சார்ந்த உயிர் வளர்க்கும் கலை.ஆட்டுக்கான தீவனத்தை பொருளாதாரம் மற்றும் சத்து நிர்வாகம் இவ்விரண்டு காரணிகளை ஒருங்கிணைத்து, சரிவிகிதத்தில் தீவனத்தைதேர்வு செய்ய வேண்டும். 

;