புதுதில்லி,ஆக.30- ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் வரும் திங்கட்கிழமை வரை ப.சிதம்பரத்திற்கு காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் வெள்ளியன்று முடிவடைந்ததால், சி.பி.ஐ. அதிகாரிகள் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தினர். சிதம்பர த்தின் காவலை 5 நாட்கள் நீட்டிக்குமாறு சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி வரை இதுவரை 400 கேள்விகள் கேட்கப் பட்டுள்ளது. சிதம்பரத்திடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. ஒருவரை எந்த ஆவணமும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் காவலில் வைத்திருக்க முடியாது. ஏன் 5 நாள் காவல் போதும் என்று கூறினீர்கள். காவல் நீட்டிப்பிற்கு வலுவான காரணங்கள் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, வரும் திங்கட்கிழமை வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
ஆவணங்கள் தாக்கல்
இந்தநிலையில் வெள்ளியன்று ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை அமலாக்கத்துறை சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.