tamilnadu

img

டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அழுந்தப் பதிந்த பத்தாண்டுகள்..!! - கணேஷ்

பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், டிசம்பர் 20, கோவையில் குஜராத் சமாஜத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டது. அது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கமாக இயங்கி வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக எழுச்சியடைந்து நிற்கிறது. மையங்களின் செயல்பாடுகளால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள், ரயில்வே, காவல்துறை என்று அனைத்துத் துறைகளிலும் மையங்களில் பயின்றவர்கள் பணியில் அமர்ந்திருக்கிறார்கள்.

சாதனைகள் பல

கடந்த பத்தாண்டுப் பயணத்தில் ஏராளமானவர்களை சாதனைப் படிக்கட்டுகளில் மையம் ஏற வைத்திருக்கிறது. இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நமது மையங்களில் பயின்று பணியில் அமர்ந்திருக்கிறார்கள். மாநிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் மையம் என்ற பெருமை யோடு, இன்சூரன்ஸ் ஊழியர்களின் பொறுப்பில் இயங்கும் கோவை மையம் இருநூற்றுக்கும் மேற்பட்ட வெற்றியாளர்களைத் தந்திருக்கிறது. கோவையில் இந்திய வங்கி ஊழியர் சங்கம் நடத்தும் மையமும் உள்ளது. அங்கிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் அமர்ந்துள்ளனர். வடசென்னை, கறம்பக்குடி (புதுக்கோட்டை), உடுமலைப்பேட்டை மற்றும் கும்பகோ ணம் மையங்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றன. 

இடஒதுக்கீடு கேள்விக்குள்ளானபோது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேள்விக்குள்ளானபோது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்துடன் இணைந்து அதில் தலையீடு செய்யப்பட்டது. நமது கருத்தை வங்கி நிர்வாகம் எற்றுக்கொண்டு, அதைச் சரிசெய்தபோது 451 பேருக்கு வேலை கிடைத்தது. வங்கித் தேர்வுகளில் நமது மைய மாணவர்கள் பல சமயங்களில் முதல் மதிப்பெண்கள், இரண்டாவது மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். 

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வகுப்புகள் இதுவரையில் வேறு எந்த பயிற்சி மையமும் செய்யாத ஒன்றாகும். தேசியப் பார்வையற்றோர் இணையத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு முதல் வகுப்புகள் நடத் தப்படுகின்றன. இதுவரையில் 13 வகுப்புகள் நடத்தப் பட்டுள்ளன. கடந்த நான்காண்டுகளில் 35 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் பொதுத்துறைப் பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள். வங்கி அதிகாரிகளாக வாணி மற்றும் அசோக், இஸ்ரோவில் சிநேகா, ரிசர்வ் வங்கியில் ரம்யா, நாட்டிலேயே இருந்த ஒரே ஒரு இடத்தைப் பெற்ற ராம்குமார் என்று பதிக்கப்பட்ட முத்திரைகள் சிறப்பானவையாகும்.

அம்பேத்கர் பயிற்சி மையத்தின் சார்பில் டாஸ்மாக் ஊழி யர்களுக்கு துறை சார்பில் நடந்த துணை உதவியாளர் தேர்வுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. டாஸ்மாக் ஊழியர் சங்கம் இந்த வகுப்புகளை பொறுப்பேற்று நடத்தியது. கோவை வகுப்பில் பயின்ற 15 பேர், ஈரோட்டில் பயின்ற 8 பேர் மற்றும் சென்னையில் பயின்ற 10 பேர் தேர்வாகியுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழிகாட்டுதலில் ஈரோட்டில் பாரதி கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இரண்டே ஆண்டுகளில் 50 பேருக்கு அரசு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதில் அந்த மையம் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சிறுபான்மை நலக்குழு சார்பிலும் ஈரோட்டில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள்

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதில் திருச்செங்கோடு மையத்தின் பணி மிகவும் சிறப்பான தாகும். திருச்செங்கோடு, கோவை, மதுரை, தாராபுரம், பல்லடம், கடலூர், ஈரோடு மையங்களின் முயற்சிகளால் 2019 ஆம் ஆண்டில் மட்டும்  50 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைச் சந்திக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கள் நடந்துள்ளன. 

பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்குவதோடு, தேர்ச்சி பெற்ற சிலருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களை வாங்கித் தரும் அளவுக்கு முனைப்போடு செங்கல்பட்டு இயங்கியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நான்கு மையங்கள் இயங்குகின்றன. அமைப்பு ரீதி யான ஒருங்கிணைப்புடன் இந்த மையங்கள் செயல்படு வது சிறப்பம்சமாகும். தொடர்ந்து இடைவிடாமல் வகுப்பு களை திருச்சி மையம் நடத்தி வருகிறது. 

ரத்ததான தன்னார்வலர்களாக மாணவர்களை ஒருங்கிணைப்பதில் கோவை மையம் வெற்றி பெற்றது. 2018 ஆம் ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மைய மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் நமது வகுப்புகளில் பங்கேற்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி களும் தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாடுகளில் மைய மாணவர்கள் பங்கேற்றனர். பல மையங்களில் முன்னாள் மாணவர்களே இன்றைய ஆசிரியர்களாக மாறிப் பணி செய்வது மையத்தை மெருகேற்றியிருக்கிறது.

தன்னார்வக் கடல்

தற்போது 19 மையங்களில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்றாலும், கடந்த பத்தாண்டுகளில் 32 இடங்களில் பல்வேறு பணிகளுக்கான வகுப்புகள் நடந்துள் ளன. எந்தவிதக் கட்டணமும் வாங்காமல், தொழிற் சங்கங்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உதவியோடு ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டியுள்ளது. வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களில் கிட்டத்தட்ட அனைவருமே எந்த விதக் கட்டணமும் வாங்காமல் பயிற்சி தருவது சாதாரண மானது இல்லை. சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் இந்த மையங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். அதேபோல் ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பேர் தன்னார்வத்தோடு பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் மையங்களை ஒருங்கிணைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.

காமராஜபுரம்

போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளுக்கு மையங்கள் இருக்கின்ற நகரம் அல்லது மாவட்டம் முழுவதுமிருந்து மாணவர்கள் வந்து பயின்று வருவதுதான் வழக்கமாகும். இதிலிருந்து சிறிது மாறுபட்டு, குடியிருப்புப் பகுதியில் மையத்தைத் துவங்கலாம் என்ற பரிசோதனை முயற்சி தான் கோவை நகர்ப்பகுதியில் அருந்ததியர் மக்கள் வாழும் வடகோவை, காமராஜபுரம் மையமாகும். டிசம்பர் 6, 2018 அன்று துவங்கப்பட்ட இந்த மையத்தில் 100 வகுப்புகளுக்கு மேல் நடைபெற்றிருக்கிறது. குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்புகள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்துள்ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தோடு இணைந்து மேஜிக் ஷோ உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.  குடியிருப்புப் பகுதியிலேயே ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 14 வயது சுப்ரீத், மாணவ ராக வந்து, ஆங்கில வகுப்பு எடுக்கும் அளவுக்கு மாறியி ருக்கிறார். 

இப்பகுதியில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத் தோடு இணைந்து சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது முத்திரை பதித்த நிகழ்ச்சியாக அமைந்தது. அந்த நிகழ்ச்சி யிலேயே பத்து பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. பதிவு செய்யாத வர்கள், பதிவு விடுபட்டவர்கள் ஆகியோருக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த மையத்தின் கல்விப்பணி தொடர்கிறது.

உயிர்நாடியான காப்பீட்டு ஊழியர்கள்

மாநிலம் முழுவதும் இந்த பயிற்சி மையங்கள் வெற்றி நடை போடுவதில் காப்பீட்டு ஊழியர்களின் பங்கு மகத்தான தாகும். உயிர்நாடி என்றே சொல்லலாம். பல்வேறு மையங்க ளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. வேறு சில மையங்களிலும் அதன் உறுப்பினர்கள் முக்கியமான அங்கமாக இருக்கி றார்கள். வணிக ரீதியான மையங்களை விஞ்சும் வகை யிலான ஆசிரியர்களாக இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் உருவாகியுள்ளனர். பட்டியல் நீளமென்றாலும், முத்து ராமலிங்கம் (கோவை), சுரேஷ் (பொதுக் காப்பீடு-மதுரை) ஆகிய இருவரையும் குறிப்பிடுவது அவசியமானதாகும்.  மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக தென் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சுவாமிநாதன் செயல்பட்டு வருகிறார். 

இன்சூரன்ஸ் ஊழியர்களோடு, அரசு ஊழியர் சங்கம், சிஐடியு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம்(சிஐடியு), மில் தொழிலாளர் சங்கம் (சிஐடியு), அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆகிய அமைப்புகளும் மையத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளன. சில இடங்களில் ரோட்டரி கிளப் (உடுமலை), பெண்கள் மேம்பாட்டு அமைப்பு (பள்ளிப் பாளையம்) போன்ற அமைப்புகளுடன் இணைந்தும் மையங்கள் செயல்படுகின்றன.

போட்டித் தேர்வுகளைத் தாண்டி

போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளில் கிடைத்த அனு பவத்தை வைத்துப் பார்க்கையில், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் அதற்குத் தயாராகி விட வேண்டும் என்ற கருத்து உருவானது. இதனால் மாலை நேர அல்லது இரவு நேர வகுப்புகள், வார இறுதி வகுப்புகள் உள்ளிட்டவற்றில் கவனம் மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் செங்கத் துறை, வீரகேரளம், காமராஜபுரம், ஈரோட்டில் நசியனூர், திருப்பூரில் அழகுமலை என்று பல்வேறு முயற்சிகள் நடந்துள் ளன. பொதுவாக, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், கிராமப் புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டையும் எதிர்கொள்வதில் சவால்கள் உள்ளன. இவற்றில் அம்பேத்கர் பயிற்சி மையம் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.



 

 

;