tamilnadu

img

செருவாவிடுதியில் தமிழ் இலக்கிய விழா

தஞ்சாவூர், செப்.29- தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் உலகளவிலான தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். முத்துப்பேட்டையைச் சேர்ந்த மாறன் என்பவரை நிறுவனராகவும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோதி செல்லத்துரை என்பவரை தலைவராகவும் கொண்டு நிலா முற்றம் என்ற பெயரில்,  உலக அளவில் வளர்ந்து வரும் தமிழ் இளம் படைப்பாளர்களையும் கவிஞர்களையும்  ஊக்குவிக்கும் பொருட்டு, இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.   அமைப்பின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை தமிழ் பாரம்பரிய கலைகளுடன் விழாக்குழுவினர் வரவேற்றனர்.   நிகழ்ச்சிக்கு, கவிஞர் சோதி செல்லத்துரை தலைமை வகித்தார்.  அமைப்பின் நிறுவனர் முத்துப்பேட்டை மாறன் அறிமுக உரை ஆற்றினார். விழாவில், கவியரங்கம், நூல்கள் வெளியீடு, வாழ்த்தரங்கம், பாராட்டரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவில் 25 கவிஞர்களுக்கு பதக்கங்கள் வழங்கி,  கௌரவிக்கப்பட்டனர். இவை தவிர, தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் பல்வேறு வகைகளில் சிறப்பு செய்து வரும் சுமார் 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.  விழாவில், முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், திருநெல்வேலி மண்டல தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் இராஜேந்திரன், கவிஞர்கள் பாலு கோவிந்தராஜன், பொற்கை பாண்டியன், நிறைமதி நீலமேகம், சிந்தைவாசன், மல்லிகா பாரூக் உட்பட தமிழ்அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் வளரும் படைப்பாளர்கள் கவிஞர்கள் விழாவில் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிலா முற்றம் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக, கவிஞர் பட்டுக்கோட்டை சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

;