கும்பகோணம், நவ.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அமோக விற்பனையில் இருந்து வருகிறது. சமீப காலமாக கடைகளில் பொருட்களை பொதுமக்கள் வாங்க வரும்போது கையில் துணிப்பைகளை ஆர்வமுடன் எடுத்து வரும் நிலை இருந்து வந்தது. தமிழக அரசின் பிளாஸ்டிக் பைகள் தடை அறிவிப்பு அதிகபட்ச பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருந்தது நிலையில், கும்பகோணம் பகுதியில் குப்பைகளின் அளவு குறைந்து காணப்பட்டது. இப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அனைத்து இடங்களிலும் மீண்டும் தங்கு தடையின்றி எளிதாக கிடைப்பதால் குப்பைகளின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. மளிகை கடை, உணவகத்தில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பிளாஸ்டிக் பைகளை வழங்கி வருகின்றனர். ஆகையால் கும்பகோணம் பகுதியை பிளாஸ்டிக் பயன்பாடுகள் இல்லாத பகுதிகளாக மாற்றி, சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?