tamilnadu

அரசு தபால் துறையின் தாமதம் : மக்கள் அதிருப்தி

தஞ்சாவூர், மே 24-கடந்த 17 ஆம் தேதி அரசு விரைவு தபால் சேவையில் 41 ரூபாய் கட்டணம் செலுத்தி பேராவூரணிக்கு அனுப்பப்பட்ட தபால் 20 ஆம் தேதி மதியம் கிடைத்துள்ளது. 20 ரூபாய் கட்டணத்தில் முதல் நாள் இரவு தனியார் கூரியர் நிறுவனங்களில் அனுப்பப்படும் தபால்கள், தமிழகத்தின் எந்த மூலையிலும் அடுத்த நாள் காலையில் கிடைத்து விடுகிறது. இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த தபால் பிரிப்பகம் மூடப்பட்டதால், திருச்சியிலிருந்து பேராவூரணி பகுதிக்கு அனுப்பப்படும் தபால்கள், தஞ்சாவூர் வந்து,  தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் தபால் பிரிப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தபால்கள் பிரிக்கப்பட்டு பேருந்து மூலம் பேராவூரணி பகுதிக்கு அனுப்புவதால் காலதாமதம் ஆகிறது என்றனர். இதை விட கொடுமை பேராவூரணியிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள ஊருக்கு ஒரு தபாலை அனுப்பினாலும் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருவாரூருக்கு அனுப்பி  4 நாட்களுக்கு பிறகு தான் கிடைக்குமாம். தஞ்சாவூர் வரும் பேராவூரணி பகுதி தபால்களை தஞ்சாவூர் தபால் பிரிப்பகத்திலேயே பிரித்து அனுப்பினால் அடுத்த நாளே கிடைத்து விடும். பேராவூரணி பகுதி தபால்களை திருவாரூருக்கு அனுப்பாமல் தஞ்சாவூரிலே பிரித்து அனுப்ப வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை. இது போன்ற குளறுபடிகள் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது. தபால் துறை தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாக இதுபோன்ற அபத்தமான முடிவுகளை எடுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தபால் துறை செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

;