tamilnadu

img

விலை அதிகரித்த போதிலும் கருவாடு விற்பனை அதிகரிப்பு.....

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் விலை அதிகரித்துள்ள போதிலும்,கருவாடு விற்பனை அதிகரித்துள் ளது. பொதுமக்கள் அதனை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். தற்போது கொரோனாத் தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக மே 10 முதல் 24 ஆம் தேதி வரை, இரு வாரத்திற்குமுழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள்வெளியில் நடமாட முடியாத வாறு தடை விதிக்கப்படலாம் என்றஅச்சம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் கடைவீதியில் குவிந்தனர். மளிகைப் பொருட்கள், பால், மருந்து, காய்கறி, பழக்கடைகள் காலை முதல்மதியம் 12 மணி வரை திறந்திருக் கும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களிடையே பரவிய வதந்தியால் கடைவீதியில் திரண்டு, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவித்தனர். 

இந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் போடப்பட்டிருந்த கருவாட்டுக் கடைகளில் பொதுமக்கள் கூடி தங்களுக்கு தேவையான கருவாடுகளை வாங்கிச் சென்றனர். தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கருவாடு தயாரித்து, காயவைத்து விற்பனைக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி பகுதியில் இருந்து கொண்டுவரப் பட்ட கருவாடு விற்பனை செய்யப்பட்டது. கருவாடு உற்பத்தி இல்லாத நிலையில், வழக்கத்தை விட கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டது. 

கருவாடு விலை ரூ (கிலோ ஒன்றுக்கு) ஆதட்டைகாரல் பொடி - ரூ.160, நெய்மீன் - ரூ.600 முதல் 800, பண்ணா- ரூ.240, நெத்திலி - ரூ.500 முதல் 600, கத்தாழை - ரூ.200, மஞ்சள் பாறை -ரூ.500 முதல் 600, சுறா - ரூ.400 முதல் 600, திருக்கை - ரூ.250, சூடப்பொடி - ரூ.160, வெங்கணா - ரூ.160, கூனிக் கருவாடு - ரூ.200முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது. கருவாடு வியாபாரி முகமது அலி ஜின்னா கூறுகையில், “மீன்பிடித் தடைக்காலம் காரணமாக, கருவாடு உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக, காய வைக்கப் பட்டிருந்த கருவாடு மழையில் நனைந்து வீணாகி விட்டது. எனவே கருவாடு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும்,இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியில் இருந்து கருவாடு வாங்கி வந்து சில்லறை விற்பனை செய்து வருகிறோம். தடைக்காலம் என்பதால்வழக்கத்தை விட, கருவாடு விலைஅதிகரித்து காணப்படுகிறது. இருந்த போதிலும் ஊரடங்கு காரணமாக விற்பனை அதிகரித்து வருகிறது” என்றார். 

;