tamilnadu

img

கொரோனா சிகிச்சை: தஞ்சையில் 6 பேர் வீடு திரும்பினர்

தஞ்சாவூர், மே 13- கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஆறு நபர்கள் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினர் என தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டத்தில், இதுவரை 69 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை வரை, 47 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை அன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இருவர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த தலா ஒரு நபர் என 6 நபர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் 69 நபர்களில், 53 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், 16 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியவர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) மரு.மருததுரை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.  காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், சோதனை மையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 10,645 நபர்களுக்கு சளிப் பரிசோதனை (ஸ்வாப் டெஸ்ட்) எடுக்கப்பட்டது. இதில் 9,646 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 930 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.