tamilnadu

img

ஜிக்னேஷ் மேவானி, யோகேந்திர யாதவ், சூர்யா பாஸ்கர் சிபிஎம் வேட்பாளர் அம்ராராமுக்கு சிகாரில் வாக்கு சேகரிப்பு

ஜெய்ப்பூர், மே.4- ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ராராமுக்கு ஆதரவாக தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி, விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ், பிரபல பாலிவுட் நட்சத்திரம் சூர்யா பாஸ்கர் உள்ளிட்டோர் வெள்ளியன்று (மே 3) தொகுதியின் பல்வேறு இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்கள் பாஜக அரசின் விவசாயிகள் விரோத-மக்கள் விரோத கொள்கைகளை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். மூவரும் மக்களுக்கான - மதச்சார்பற்ற மாற்று முன்னுக்கு வரவேண்டியதன் அவசியம் குறித்து தமது உரையில் குறிப்பிட்டனர்.தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டங்களின் பேரில் அம்ராராமுக்கு வாக்களிக்குமாறு சூர்யா பாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். விவசாயிகளின் குரல் மக்களவையில் ஒலிக்க அவரது வெற்றி உதவும் எனவும் அவர் கூறினார். அவர்கள் (பாஜக அரசு) உங்களை பாகிஸ்தான் என்று கூறுவார்கள், நீங்கள் கிசான் (விவசாயி) என்று கூற வேண்டும். அவர்கள் ஜவான் என்பார்கள் நீங்கள் கிசான் என்று பதிலளிக்க வேண்டும். எல்லையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் படை வீரர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயிகளின் பிள்ளைகளாவர். எல்லையிலும், தங்களது குடும்பத்திற்காகவும் பலியாக வேண்டிய அவலநிலையில் அவர்கள் உள்ளதாக சூர்யா பாஸ்கர் கூறினார். நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்கள் மக்களது பிரச்சனைகளை புறக்கணித்து மோடிக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வழங்கி வருவதாக ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார். குஜராத்தில் நான்கு மாதங்களுக்குள் 25 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அது செய்தியாகவில்லை. தொழிலாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க முக்கிய ஊடகங்கள் தயாரில்லை. நாம் தினந்தோறும் பயன்படுத்தும் அனைத்தும் தொழிலாளர்களின் வியர்வையால் வந்தவை. அவர்களது குரல்கள் ஊடகங்களில் எங்கும் வெளியாகவில்லை. இந்து-முஸ்லிம், பாகிஸ்தான்-இந்துஸ்தான், ராம்-ரஹீம், பசு போன்றவையே ஊடகங்களுக்கான செய்திகள் என மேவானி கூறினார்.சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பேசினர்.

;