tamilnadu

img

நிதித் துறையை மீட்கும் நிலையில் அரசாங்கம் இல்லை... அதனுடைய பாடே நாளுக்கு நாள் திண்டாட்டமாகி வருகிறது...

ஜெய்ப்பூர்:
பொருளாதாரத்திற்கான ‘நோபல்’ பரிசு பெற்றவரும், அமெரிக்கவாழ் இந்தியருமான அபிஜித் பானர்ஜி, 13-ஆவது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாட்டில் தற்போது நிதித்துறை மிகப்பெரிய அழுத்த புள்ளியாக உள்ளது. நிதித்துறை என்பது நாம் கவலைப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக வங்கித்துறை அழுத்தத்தில் உள்ளது. ஆனால் அதை பிணையம் எடுக்கும் நிலையில் இந்திய அரசாங்கமும் இல்லை என்பது மிக கவலையளிக்கும் ஒரு விஷயம்.ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. இதுபோன்ற  காரணிகள், ‘இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளரப் போகிறது’ என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் குறைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் செலவு செய்யவில்லை.

நகர்புறம் மற்றும் கிராமப்புறத் துறைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால், நாட்டில் வறுமை ஒழிப்பை இது மோசமாக பாதிக்கும். மேலும் நிலவிவரும் மந்தநிலையால் நகர்ப்புறத்தில் குறைந்த வேலை வாய்ப்புகளையே இதுஉருவாக்குகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நகர்ப்புறத்தை நோக்கி வேலைக்காக நகர்கிறார்கள். இதன் மூலம் நகர்புறத்திலிருந்து பணத்தை கிராமப்புறங்களுக்கு திருப்பி அனுப்புகிறார்கள். சொல்லப்போனால் நகர்ப்புறத்திலிருந்து வளர்ச்சியை பரப்புவதற்கான ஆதாரம் இதுதான். நகர்ப்புறம் கிராமப்புறத்தை மந்தப்படுத்தியவுடன் கட்டுமானப் பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகமான வேலைகள் இல்லை. இவை அனைத்தும் கிராமப்புற பொருளாதாரத்திலேயே பிரதிபலிக்கும்.நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான நம்பிக்கை சற்று வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பதற்றமாக உள்ளனர். இதுகுறித்து அரசாங்கம் கவலைப்பட வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் அதிக முதலீடு மற்றும் அதிக ஈடுபாட்டை கொண்டிருக்க விரும்பினால் அரசு இதை கவனிக்க வேண்டும். முதலில் உண்மையான தரவை மக்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

;