tamilnadu

வெள்ளி தொழிலை பாதிக்கும் வாகன சோதனை

சேலம், ஏப். 3- வாகன சோதனை என்ற பெயரில் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்வதை கைவிட வலியுறுத்தி வெள்ளி உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க தேர்தல் ஆணையம் பலநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலைக்குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கட்டிகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வெள்ளி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தொழிலை மேலும் செய்ய முடியாத அளவிற்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என சேலம் வெள்ளி பூ மிசின் கைவினைஞர்கள் பணியாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.இதில் வெள்ளி தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எனவே தங்களின் தொழிலில் அவசர அவசியம் கருத்தில் கொண்டு பறக்கும் படை நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டனர்.மேலும், மத்திய அரசின் ஜிஎஸ்டியினால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது என்றும் சிறு மற்றும் குறு தொழில்கள் பாதிக்கப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் செயல்பட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

;