tamilnadu

சேலம் முக்கிய செய்திகள்

சேலத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு

சேலம், மே 15-சேலத்தில் தனியார் பள்ளிகளின் பேருந்துகளின் தகுதி குறித்து முதல்கட்ட ஆய்வு நடைபெற்றது. இதில், 10 பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.சேலம் மாவட்டம், ஒமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்துச் சென்று வருவதற்காக 239 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், மேட்டூர் கோட்டாட்சியர் லலிதா தலைமையில் ஆய்வு செவ்வாயன்று நடைபெற்றது. டிஎஸ்பி சரவணன், சேலம் மேற்கு மண்டல மோட்டார் வாகன அலுவலர் தாமோதரன், ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் இ.எஸ்.முருகேசன் உள்ளிட்டோர் முதல்கட்டமாக 137 பேருந்துகளை ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு குறைபாடுகளுடன் இருந்த 10 பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டது. இதன்பின்னர், ஓமலூர் சரகத்தில் கடந்த ஆண்டு விபத்து இல்லாமல் ஓட்டிய பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு பாராட்டு தெரிவித்த கோட்டாட்சியர் லலிதா, வரும் ஆண்டிலும் விபத்தில்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என்றார்.


சேலம் அரசு கலைக் கல்லூரியில் மே 20ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

சேலம், மே 15-சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 20 ஆம் தேதியன்று தொடங்குகிறது.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் எஸ்.கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு கலை- அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 20 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இளநிலை தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு மே 20 ஆம் தேதி காலையில் நடைபெறும். இளநிலை ஆங்கிலப் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும்.இதைத்தொடர்ந்து, கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், புவியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 21 ஆம் தேதி நடைபெறும்.மேலும் அனைத்து அறிவியல் பிரிவு மாணவிகளுக்கானகலந்தாய்வு மே 22 ஆம் தேதி நடைபெறும். வணிகவியல், வணிக நிர்வாகவியல், கூட்டுறவியல், வரலாறு, பொருளியல், அரசியல்சார் அறிவியல்,பொது நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 27 ஆம் தேதி நடைபெறும். இதைத்தொடர்ந்து அனைத்து கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் மாணவிகளுக்கான கலந்தாய்வு மே 28 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளர்.