tamilnadu

img

சோவல் நிறுவன தொழிலாளர் விரோத போக்கிற்கு துணை போகாதே தமிழக அரசு, காவல்துறையை கண்டித்து சிஐடியு ஆவேசம்

சேலம், மே 22-சோவல் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் அதற்கு துணைபோகும் தமிழகஅரசு, காவல்துறையை கண்டித்துசேலத்தில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகிலுள்ள சோவல் நிறுவனத்தில் 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் ஆலை மூடல் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆலைதொழிலாளர்கள் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் வழுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ள சிஐடியு தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை உடடினயாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.மேலும், சோவல் ஆலையை முழுமையாக மூட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையால் அங்குபணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் கடுமையான பாதிப்பிற்குள்ளாவர்கள். ஆகவே, இப்பிரச்சனை தொடர்பாக தமிழக அரசுஉடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி புதனன்று சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, என்.கே.தியாகராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;