tamilnadu

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம், மே 20-சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேளாண் உதவி இயக்குநர் சித்ரா அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை செய்வதற்கு ஒரு வரப் பிரசாதமாக அமைவது சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். அதிலும் சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள் அமைத்தல், மழைத் துவான்கள் அல்லது தெளிப்பு நீர் கருவிகள் அமைத்து பாசனம் செய்தல் ஆகும். இவ்வாறு நீர்ப் பாசனக் கருவிகள் மூலம் பாசனம் செய்வது, நேரிடையாக பயிரின் வேர்ப் பகுதிக்கு நாள்தோறும் நீரைச் செலுத்தும் முறையாகும்.கிணற்றிலிருந்து நேரிடையாக பயிருக்கு நன்கு திட்டமிடப்பட்டு குழாய்கள் மூலம் நீர் எடுத்துச் செல்லப்படுவதால் நீர்ச்சேதம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.மேட்டுப்பாங்கான நிலத்திலும் குறைந்த மற்றும் அதிக நீர் ஊடுருவும் மண்ணிலும் சிறப்பான பாசன உபயோகம் ஆகும். எனவே இத்தகைய பயன்பாடுகளை பெறும்பொருட்டு கெங்கவல்லி பகுதியைச் சார்ந்த விவசாயிகள் அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணைந்துபயன்பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற தங்களுடைய நில சிட்டா, அடங்கல் (அசல்),குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வரைபடநகல் மற்றும் சிறுகுறு விவசாய அசல் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம்நான்கு எடுத்துக் கொண்டு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி இயக்குநரை அணுகி பயன் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கெங்கவல்லியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தம்மம்பட்டி காந்திநகர்ப் பகுதியில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகி விவசாயிகள் பலன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;