tamilnadu

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாதது ஏன்? அரசு விளக்கம்

சென்னை, ஜூன் 4-கோடை வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவும்  இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணியவுமான விதிகளை அரசு முறையாக செயல்படுத்த உத்தரவிடக் கோரும் பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போது ஹெல்மெட் அணிவதில்லை என்றும் கூறப் பட்டது. அப்போது ஈ.சி.ஆரில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வாகனத்தை ஓட்டியவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறினர். அப்போது சட்டவிரோத பைக் பந்தயங்களை தடுக்க வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

;